பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அகத்தி மரம்

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி.

                                                                      -  திருக்குறள்.




அகத்தி இலையின் குணம்

அகத்திப் பூவின் குணம்

அகத்தி இலை, பூ படங்கள்

அகத்திப்பூ சமையல் முறை



 அகத்தி மரம்

அகத்தி மரம்  20 முதல்30 அடி வரை அடி பெருக்காது நீண்டு வளரும், வெற்றிலை கொடிக்கால்களில் இதனை வெற்றிலை பற்றி ஏற வளர்ப்பார்கள், இது தமிழர் ஆண்டு தொடக்கமான தை மாதத்தில் பூ மலர ஆரம்பிக்கும் அடுத்த மாதமாகிய மாசி மாதம் வரை இது பூவிடும். ஆகவே தை, மாசி மாதங்களில் கிராமங்களில் அகத்திப்பூவை  விடாது சமையலில் சேர்ப்பர்.


அகத்தியிலையின் குணம்

                        மருந்திடுதல்போகுங்காண்வண்கிரந்தி வாய்வாந்

                                    திருந்த வசனஞ் செறிக்கும் -  வருந்தச்

                        சகத்திலெழு பித்தமது சாந்தியாம் நாளு

                                    மகத்தியிலை தின்னு மவர்க்கு.

            இன்னமும் சில கிராமங்களில் இருக்கும் இழி குணம், அடுத்தவர்க்கு தீங்கு செய்ய மருந்தீடு செய்வதாகும், இடு மருந்து என்பது ஒருவரின் உடல் நலன் மற்றும் மன நிலையைக் குலைக்க அவர் உண்ணும் உணவில் சில தீய பொருட்களை கலந்து விடுதலாகும், அத்தகைய இடுமருந்து வைக்கப்பட்டவருக்கு அடிக்கடி அகத்திக் கீரையை உணவில் சேர்த்துவர இவ்வகத்தியிலை அந்த இடுமருந்தை முறித்து மலத்துடன் வெளியேறச் செய்யும்.

        தோலில் உண்டாகும் 18 வகை சொறிப்படைகளில் ( கிரந்தி) சிலவகை சொறிபடைகள் எளிதில் சரியாகாது, அத்தகைய கிரந்தி உள்ளவர்கள் அகத்தியிலையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள குணமாகும்.

        உணவு செரிக்காமல் அடிக்கடி  வாந்தி உண்டாகும் பிணி தீரும், உணவும் செறிக்கும்.

          உடலில் உண்டாகும் அனைத்து விதமான பித்தம் தொடர்பான பிணிகளும் நீங்கும். பித்த வீறு தணியும்.


                                    அகத்திப் பூவின் குணம்


                    புகைப்பித்த மும்மழலாற் பூரிக்கு மந்த 

                            வகைப்பித்த மும்மனலு மாறும் -  பகுத்துச்

                    சகத்தி லருந்தாத் தனியமிர்தே  நாளு

                            மகத்தி மலருக் கறி

அகத்திப்பூ வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கும்.

            சிகரெட் , பீடி போன்ற  புகையிலை பொருட்களைப் புகைப்பழக்கத்தினால் உண்டாகும் கண் புகைச்சல் (கண் எரிவு) போன்ற பித்த பிணிகளும், பித்த உபரியினால் உண்டாகும் பசியாமை, செரியாமை போன்ற பிணிகள் தீரும். பித்த வெட்டை (வெள்ளை), இருதயத்தின் நடை அதிகரித்தல்  போன்ற நோய்களும் தணியும். அகத்திக் கீரையை தினமும் சமைத்து சாப்பிட்டு வர உலகில் இதுவரை அருந்தாத அமிர்தம் போன்ற குணமுடையதாய் அமையும்.


அகத்திப்பூ சமைக்கும் முறை 

                அகத்திப்பூவைச் சமைக்கும் முன் அப்பூவிலுள்ள காம்பு மற்றும் மகரந்த தணடுகளில் நரம்பு போன்ற மெல்லிய மகரந்தத் தண்டை நீக்கிவிட்டு சுத்தமாகக் கழுவிக்கொள்ள வேண்டும். பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

                ஒரு வாணலியை அடுப்பேற்றி தேவையன எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து, சீரகம் போன்றவற்றை போட்டு வறுத்து வரமிளகாய், வெஙக்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கி பின் பொடியாக நறுக்கிய அகத்திப்பூவைப் போட்டு வதக்கவும் . தேவையான உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. நன்கு வதக்கியபின் இறக்க சத்தான சுவையான பொரியலாகும்.


அகத்திக் கீரையை சாதாரண  கீரைகள் செய்யும் முறையிலேயே செய்யலாம்.


கமெண்டில் இடு மருந்துகளை முறிக்கும் மருந்துகளைக் கேட்டால் தனிப்பதிவு போடப்படும்.

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி