பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 101- 200




                               101 - 200

வணக்கமுள்ள ஐந்துருவு மைந்தே யுப்பு

       வரிசை யுடனிதை யறிந்து கலவத்திட்டு

இணக்க முடனரைக்கையிலே மெழுகாய்ப் போகும்

       என்ன சொல்வேனிம் மெழுகினியல்பு தன்னை

மணக்கமுடன் மெழுகெடுத்து பதனம் பண்ணி

       மார்க்கமுட னிம்மெழுகை வைத்துப் போற்றி

தனக்கு மிதுகிடைத்த பொருளென்று நீயுஞ்

        சதாகாலம் அம்மெழுகைப் பூசை பண்ணே  -  101

 

 

பூசையது செய்ததினால் பலிக்குஞ் சித்தி

        பூரணத்தை மறந்ததினா லொன்று மில்லை

நேசமுடன் பூரணமே தெய்வமென்று

      நிலைத்து மனதுறுதியிலே நிறுத்த வேணும்

ஆசையென்ன பூரணத்தி னாசை யாசை

      அதைவிட்டால் வேறுமொரு ஆசை யுண்டு

பாசமதைத்தான் கற்றி யறிவில் சேர்ந்து

      பரவெளியில் நினைந்ததினால் பாலனாமே   -  -  - 102

 

பாலனாய்ப் பதினாறு பிராய மாவாய்

        பராபரைத்தாய் பூரணத்தால் பலிக்குஞ் சித்திக்

காலனென்ற காலனவ னோடிப் போவான்

       காலனென்று சொன்னதுதான் பாசம் பாசம்

ஆலமுண்ட சிவனாரும் விஷத்தை யுண்டார்

         அவ்விஷந்தான் பராபரத்தி னருளே யாகும்

சீலமுட னாலமென்ற விஷந்தான் போதஞ்

         சிவசிவா பூரணத்தின் செயலைப் பாரே   - -  103

  

                           கெந்தகமெழுகு

 பாரப்பா முப்பூவு மொன்றாய்ச் சேர்த்து

     பரையீன்ற நாதமடா கெந்தி ரசம்வீரஞ்

சேரப்பா கலவத்தி லாட்னாக்கால்

      சிவசிவா மெழுகதுபோல் சேர்ந்து நிற்கும்

ஆரப்பா அறிவார்கள் கெந்திப் போக்கு

      அறிந்தவர்கள் சதாசிவத்தை யறிவாரப்பா

நேரப்பா நின்றநிலை தவிரா மற்றான்

        நேசமுட னிம்மெழுகைப் பதனம் பண்ணே  -    -104

 

பண்ணப்பா பூசையினால் பலிக்குஞ் சித்தி

        பாசமதைத் தானறுத்து நேசம் வைத்து

உண்ணப்பா பராபரமே செயல் தானென்று

        வுற்றுமெள்ள ஆறுதல மூரே சென்று

விண்ணப்பா தீண்டாதே சுடரைப் போற்று

        வேதாந்த பூரணத்தில் விரும்பி நில்லு

கண்ணப்பா சுழிமுனையில் கருத்தா யூணு

        கருவான பன்னிரண்டு மடங்குந் தானே  -   - 105

 

                        தாளகமெழுகு

 

தானென்ற சற்குருவா முப்பூ வோடே

        தன்மையென்ற தாளகமும் வீரம் பூரந்

தேனென்ற ரசமுடனே கலவத்திட்டு

        திரமாக ஈராறு சாம மாட்டு

கோனென்ற மெழுகாகு மப்பா கேளு

        குருவான மெழுகதுவைப் பதனம் பண்ணு

நானென்ற ஆணவத்தைப் போக்கிக் கொண்டு

          நன்மையுடனிம் மெழுகைப் பூசை பண்ணே  - - 106

 

பூசையப்பா தினந்தோறும் பூசை பண்ணு

        புலத்தியனே உனக்கா இந்நூலை

நேசமுட னாயிரத்திருநூறாக

        நிலைத்தனடா கருவெல்லா மிதிலேயப்பா

பாசமதைத் தானறுத்துப் பதியிலூணிப்

        பாச்சடா மெழுகையுநீ தாய் மகிழ்ந்துகாணும் - -107

  

மகிழ்ந்ததொரு சிவகளையைக் கண்டு நீயு

      மகிழாதே புலத்தியனே மனம் வேறாகும்

நெகிழ்ந்த மனமிருக்குமடா வெகுநாள் செல்லும்

       நேரான பூரணத்தை நெஞ்சில் தாக்கு

பகுந்ததொரு சிவயோகப் பண்பில் நில்லு

      பராபரமே கெதியனவே பணிந்து போற்று

தகுந்த மனமுறுதியுடன் வலுத்துப் போகும்

       தண்மையுள்ள பராபரத்தைத் தாக்கிப் பாரே  - 108

 

                        லிங்கரச மெழுகு 

 பராப்பா முப்பூவும் லிங்கஞ் சேர்த்து

     பஞ்சுடைய வீரமுடன் புழுகு பூரம்

சேரப்பா கலவத்திலொன்றாய் சேர்த்து

      திரமாக அரைக்கையிலே மெழுகாய்ப் போகும்

வீரப்பா செய்யாமல் மெழுகு தன்னில்

       விஷமில்லா ரசமதிலே நாலிலொன்று

காரப்பா கலவத்திலிட்டு நன்றாய்

        கருவிட்டு அரைக்கையிலே சேர்ந்துபோமே – 109

 

சேர்ந்ததொரு லிங்கரச மெழுகு தன்னை

      திரமான சிமிழ்தனிலே யடக்கம் பண்ணு

கூர்ந்துமெள்ளக் குருபதத்தைத் தொண்டு பண்ணி

      கூர்மையுள்ள மெழுகதிலே குன்றி வாங்கி

நேர்ந்துகொண்டு இம்மெழுகைக் கொண்டாயானால்

       நிலைத்துதடா சலமென்று கூடுதானும்

தேர்ந்து இந்த மெழுகதிலே மண்டலமே கொண்டால்

        சிவசிவா கவுனமென்ற சித்துதானே -  - 110

 

               ஆனைக்கல்சத்து மெழுகு

 சித்தான சித்திலொரு விபரஞ் சொல்வேன்

      திரமான ஆனைக்கல் சத்து வாங்கி

முத்தான பூரணத்தையதிலே சேர்த்து

      மூர்க்கமுள்ள ரசமுடனே பூரங் கெந்தி

கர்த்தாவைத்தான் தொழுது ரவியில் வைக்க

      கருணையுட னாலுமதுயொன்றாய்ச் சேர்த்து

வற்றாத மெழுகது போலிருக்கும் பாரு

     வாகாக இம்மெழுகைப் பதனம் பண்ணே  - 111

 

பதனமுடனிம் மெழுகில் குன்றி யுண்ணு

      பதறாமல் மூலமதில் நின்றாயானால்

விதனமெல்லா மோடிவிடும் பலக்குங்       

      காய மேன்மையுள்ள கற்போலே விளங்குந் தேகம்

மதனன்போல் வடிவாகும் பிலமுண்டாகு

       மகத்தான அஷ்ட சித்துங் கைக்குள்ளாகும்

அதமான கருவிகள்தான் மெத்தவுண்டு

        அசடரிடஞ் சொல்லாதே யறிவைப்பாரே   - 112

 

அறிவான பூரணமே தெய்வந் தெய்வம்

        அருமையுள்ள பூரணத்தை யார்தான் காண்பார்

குறியான குறியறிந்த பெரியோர் காண்பர்

        குண்டலியைச் சத்தியென்றுங் கூறுங்கூறும்

நெறியான சிவயோக மார்க்க மெல்லா

        நேர்மையுட னறிவிக்கும் பூரணத்தின் கூறு

பரியான தேசியடா அகார பூடம்

        பரதேசி தனையறிந்து பணிகுவாயே -  - 113

 

                   அபக்குவர்களிவரெனல்

 வாய் திறந்து பேசாதமடையர் மெத்த

      வானறிந்து சேராத குருடர் மெத்த

தாயறிந்து இணங்காத கழுதை மாண்பர்

     தலைவனையு மறியாத சண்டி மாண்பர்

காயறிந்து கனியறிந்து கொள்ளா மாண்பர்

       காசினியில் மெத்தவுண்டு கருத்தில்லார்கள்

தீயறிந்து அனலமூட்டத் தெரியா மாண்பர்

      சிவ வேடந்தனை யறியார் திருடர்தானே  114

 

தானென்ற தத்துவத்தை யறியா மூடர்

      தன்மை யென்ற மனமொடுங்கும் நிலையுங்காணார்

கோனென்ற குருபத்தின் குறியுங் காணார்

        குருடாவர் காயாசங் குறடு மிட்டு

நானென்ற ஆணவத்தை மெத்தப் பேசி

        நலமில்லா அஞ்செழுத்தை யுபதேசித்து

வீணென்ற வீண்மதங்கள் மெத்தப் பேசும்

       வெள்ளாட்டிப் பயல்களுடன் சேராதையா  - - 115

 

சேராத கருவறிந்து கள்ள மாண்பர்

     செத்த பிணம்போல் திரிவார் சிவனேயென்று

கூறாத பொருளையெல்லாங்  கூகூவென்பார் 

      சுற்றிந்து நேராத குருடர் மட்டை

ஆறாது தத்துவத்தின் செயலைக் காணார்

      அகண்ட பரிபூரணத்தி னறிவைக் கண்டு

தேறாத சித்தர்கள் கோடியுண்டு

         சிவசிவா தேறினபேர் கோடிக்கொன்றே - - 116

 

ஒன்றான முப்பூவில் காரஞ் சேர்க்க

      ஒருமையுள்ள சாரநீரது தானப்பா

பன்றான சேதியிது காரசாரம்

      பருவமறிந் துலகமதில் பகர மாட்டார்

நன்றான புலத்தியனே யுனக்குச் சொன்னேன்

      நலமறியாக் காரமதைச்சாரமென்பார்

உண்டான சோதியடா ஆதியந்தம்

       உரிசையுள்ள பூரணமென் றுகந்துநில்லே - -117

 

நில்லென்று முன்சொன்ன சார நீரில்

      நிசமான வீரமூடன் பூரஞ் சேரு

கொல்லென்று பொங்கியது அமரும் பாரு

       கொடிதான நீரப்பா கூறப்போமோ

சொல்லென்ற அந்நீரைக் குப்பி தன்னில்

        சுருக்காக அடைத்துநீ பதனம் பண்ணி

வல்லமைகள் பேசாமல் மனதடங்கி

     மகத்தான செயநீராந் தொழிலைப் பாரே -- 118 

 

                 லிங்கக்களங்கு

 பராப்பா லிங்கமொரு கட்டி வாங்கி

      பருவமுடன் செயநீரைச் சுருக்குத் தாக்கு

வீரப்பா கட்டியது அடங்கிப் போகும்

     விசையான முப்பூவில் செயநீர் விட்டு

காரப்பா கலவத்தி லாட்டினாக்கால்

      கருணையுள்ள மெழுகாகும் லிங்கத்தப்பி

சீரப்பா மண்சீலை யேழுஞ்செய்து

        சிவசிவா காடைதனில் மணி போலாமே - -119

 

ஆமப்பா லிங்கமணிதனை யெடுத்து

       ஆதியென்ற தங்கமதில் நாலுக்கொன்று

நாமப்பா சொல்லுகிறோங் கொடுத்தாயானால்

        நன்மையுள்ள லிங்க தங்கமொன்றாய்ச் சேர்ந்து

தாமப்பா லிங்கமென்ற களங்கதாகுந்

       தயவான களங்கமதை யுடைத்துக் கொண்டு

வாமப்பா தனையறிந்து கொண்டு மைந்தா

      மகத்தான மதிதனிலே பத்துக்கொன்றே   - 120

 

 ஒன்றான களங்கமதை வெள்ளிக்கீந்தா

        லுத்தமனே வயது பதினாறதாகு

நன்றான வெள்ளி செம்பிலீந்தாயானால்

        நன்மையுட னொன்பதரை தப்பாதையா

நன்றான குடவனிலே யீந்தாயானால்

      கருவான ஏழரையுங் காணும்

அண்டர் பிரான் தொண்டரென அருளைப்பெற்று

        அரகரா சிவயோக அருளைப் பாரே - -121

 

                       நாகக்கட்டு 

 பராப்பா முன்சொன்ன சார நீரில்

     பக்குவமாய் நாகமதை யுருக்கிச் சாய்த்தால்

காரப்பா ஐந்துமுறை சாய்த்தாயானால்

      கன்மமுள்ள குடிலமெல்லாங் கழன்று போகும்

சீரப்பா அடங்கியது மணி போலாகுஞ்

        சிவசிவா நாகமணி யென்ன சொல்வேன்

ஆரப்பா அறிவார்கள் நாகப் போக்கு

      ஆதியந்தப் பொருளதினா லடங்கிப் போச்சே- -122

 

அடங்கினதோர் நாகமதை யெடுத்துக் கொண்டு

        அப்பனே தங்கமதி லிடைக்கிடைதான் சேர்த்து

தடங்கலில்லா மணியெடுத்து வுடைத்து மைந்தா

       தயவாக வெள்ளி செம்பிலீந்தாயானால்

முடங்கலில்லா ஆறேழு வயதேயாகு

        மூடருக்கு இக்கருவைச் சொல்லாதையா

திடங்கனிந்த அமுதமுண்டு குருவைக்காரு

        தெசதீட்சை பதிதனிலே சேர்ந்துநில்லு - - 123

 

நில்லென்று சொல்வது தானெங்கே யென்றால்

        நிருமலமாங் குருபதத்தே நேர்ந்து நில்லு

தள்ளென்ற சொல்லது தானாரை யென்றால்

       தன்மையில்லா வண்டரை நீதள்ளு தள்ளு

கொல்லென்று சொல்லது தானாரை யென்றால்

        குருவை நினைந்துருகாத குறும்பர் தன்மேல்

செல்லென்று மன்மதனைக் கொல்ல வேண்டாஞ்

        சிவசிவா குருவருளைத் தினமும் போற்றே - 124

 

                          துரிசுச்சுன்னம்

 போற்றுவது பூரணத்தைப் போற்றிக் கொண்டு

       புதுமையுள்ளது துரிசினுட சுன்னஞ் சொல்வேன்

மாற்றுவது வழலையுட ணிணங்கன் கூட்டி

        மாறாம லிடைக்கிடைதான் துரிசி கூட்டி

தாட்டிகமாய்க் கல்வத்திலிட்டுக் கொண்டு

        சமரசமாய் முன்னீரை விட்டு ஆட்டி

வாட்டிடுவாய் பில்லைதனை ரவிமுகத்தில்

        மைந்தனே நன்றாக வுலரப்போடே - -125

 

உலர்ந்த பில்லை தனக்கு மேல்சீலை செய்து

       உண்மையுடன் காயவைத்து குருவைப் போற்றி

அலர்ந்த எருதனையெடுத்து புடத்தைப் போடு

       அரகார புடமாறி யெடுத்துப் பாரு

மலர்ந்ததொரு பூப்போலே நீறி நிற்கு

        மகத்தான சுன்னமடா என்ன சொல்வேன்

தளர்ந்ததொரு ரசந்தன்னைப் பழியாகக் கொல்லும்

      தன்மையுள்ள சின்னமதைப் பதனம் பண்ணே - -126

 

                             ரசமணி 

 பண்ணியதோர் சுன்னத்தின் மார்க்கங் கேளு

       பாலகனே ரசமதனைச் சுத்தி பண்ணி

தாம்பரக்கிண்ணி தன்னில்

       கிருபையுள்ள ரசமதனை அதனில் வார்த்து

நன்னயமாய் ரவிதனிலே ரசத்தை வைத்து

        நன்றான சுன்னமதை மேலே தூவி

கன்னிமயேஸ்வரி தனக்குப் பூசை பண்ணி

        கையாலே மத்திக்க திரளுந்தானே - - 127

 

திரமான ரசமதனை யெடுத்து மைந்தா

     சிவசிவா வுண்டைபோல் திரட்டிக் கொண்டு

உரமான முப்பூவில் முன்னீர் விட்டு

      வுத்தமனே குப்பிமணி தனக்குப் பூசி

நிறமான ரவி முகத்திலுலர்த்தி மைந்தா

       நிச்சயமாய் விளக்கொளியில் வாட்டினாக்கால்

பரமான பரமகுரு அருளினாலே

      பக்குவமாயிருகியது மணி போலாமே - - 128

 

ஆமப்பாயிம் மணிக்குச் சாரணைகள் தீர்ந்து

        அருள் பெருகுஞ்சிமிழ் தனிலே யடக்கம் பண்ணி

நாமப்பா சொல்லுகிறோம் நாவிலிட்டு

      நன்மையுள்ள அமுதமது கொண்டா யானால்

தாமப்பா வுனதுருவம் நிர்மலமாய்க் காணுஞ்

     சச்சிதானந்தவொளி தானே தோன்றுந்

காமப்பா கொண்டதொரு திறத்தால் மைந்தா

      கயிலாச மேறு தன்னைக் காணலாமே  - -129

 

                வழலை நாத முப்பூச்சுன்னம்

 

காணப்பா இன்னமொரு முப்பூவைச் சொல்வேன்

       கருவான வழலையுட நாதங்கூட்டி

பேணப்பா இந்திடைக்கு பூரஞ்சேர்த்து

       பெருமையுள்ள கலவத்திட்டு மைந்தா

தேனப்பா முன்சொன்ன செயநீர் விட்டு

       திரமாக அரைக்கையிலே காரமேறி

கோணப்பா தன்னருளால் சுன்னமாகி

       கொடுமையுள்ள சுன்னமதாகி நிற்குந்தானே - -130

 

                     அரிதாரக் கட்டு

 தானென்ற சுன்னமதை யெடுத்துக்கொண்டு

        தாரமென்ற அரிதாரக் கட்டிக்கப்பா

வானென்ற செயநீராலரைத்து மைந்தா

        மகத்தான தாரத்துக்கங்கி பூட்டி

பானென்ற ரவி முகத்திலுலர்த்தி மைந்தா

       மண்சீலை யேழுஞ்செய்து

தேனென்ற பூரணத்தை மனதில்வைத்து

       சிவசிவா காடையென்ற புடத்தைப்போடே - -131

 

போட்ட புடந்தன்னை யெடுத்துப்பார்த்தா யானால்

    புதுமையுள்ள தாரமது கட்டிப் போகும்

தாட்டிகமாய்க் கட்டியதோர் தாரந் தன்னை

      தயவான செம்பு வெள்ளீக் கீந்தாயானால்

நாட்டமுட னீராறுவயது பெண்தான்

      நாயகி போலுனது முன்னே நாடிநிற்பாள்

தேட்டமுட னவள்பதத்தைப் பூசை பண்ணு

      தெவிட்டாதே பூரணத்தை தினமுநோக்கு  - - 132

 

நோக்குவது பூரணத்தை நோக்க வேணும்

        நுண்மையுள்ள லட்சணத்தைப் பார்க்க வேணும்

தாக்குவது ஒரு நிமைக்குளிருளையெல்லாந்

        தட்டழிந்து போகவே தாக்க வேணு

மார்க்கமுடனிம் முறைகள் பார்க்க வேணும்

       மந்திர பஞ்சாட்சாத்தில் நிற்க வேணும்

ஆர்க்குமிந்த முறைகளை நீ சொன்னாயானால்

       அப்பனே யுனதுசிரம் வெடித்துப்போமே - - 133

 

போமப்பா சகலசித்தும் பொ(ய்)ச்சுப் போகும்

      பொல்லாத சண்டாளர்க் கீந்தாயானால்

நாமப்பா சொல்லுகிறோ மிந்தசாபம்

      நம்மாலே தீர்ப்பதற்கு முடியாதையா

ஆமப்பா சொல்லிவிட்டோ மிந்தநூலை

        அடக்கமப்பா வெகுபதனமடக்கம் பண்ணு

தாமப்பா அடக்கம்விட்டு வெகுளியானால்

      தன்னுடலைக் காணாமல் தயங்குவாயே - -134

 

                       நாக ரசக்கட்டு

 தயங்காமலின்ன மொரு விபரங்கேளு

      தயவான நாகரசஞ் சரியாய்ச் சேர்த்து

மயங்காம லடிமுடியுந் துரிசி பூர

      மகத்தான வீரமுடன் சீனங் கூட்டி

தியங்காமல் கலவத்திலாட்டி மைந்தா

       தேவி யென்னு மால்தேவிக் கங்கி பூட்டி

நயங்காணுமென்று நீ சீலை செய்து

      நன்றாக ரவிமுகத்தில் காய வையே - - 135

 

வையப்ப ரவிமுகத்தில் நன்றாய்க் காய்ந்தாக்கால்

        மயங்காமல் புடம்போட மைந்தா கேளு

மெய்யப்பா சொல்லுகிறோம் நன்றாய்க் கேளு

        மேன்மையுள்ள ரவிபோலே கட்டி நிற்குங்

கையப்பா வுதவுவது போலே மக்காள்

         கனமான ரவிமதி யிலீந்தாயானால்

பொய்யப்பா சொல்லவில்லைப் பத்துமாற்று

        பொன்போலே யிருக்குமடா புகழ்ந்துதானே-136

 

காணப்பா உப்புடனே புளியுஞ் சேர்த்து

        களிப்பான குடவனைத்தான் தகடாய்த் தட்டி

வீணப்பா சொல்லவில்லை தகடு தன்னில்

        விசையான அரைமருந்தை வினவிக் கொண்டு

பேணப்பா புடம்போடச் செம்பாய்ப் போகும்

       பிலத்ததொரு செம்பதனை உருக்கிக்கொண்டு

வூணப்பா கட்டினதோர் தாரந்தன்னை

        உகந்து நீ கொடுக்கின்ற வரிசைகேளே  -   137

        

கேளப்பா வுருகினதோர் குடவன் தன்னில்

        கிருபையுடன் வெள்ளியதி லீந்து கொண்டு

கேளப்பா வாராம லிரண்டுஞ் சேர்த்து

        குள்ளென்று வுருக்கையிலே மைந்தா கேளு

வாளப்பா கட்டினதோர் தாரந் தன்னை

        வரிசையுடன் கொடுக்கையிலே வாங்கிக் கொள்ளுந்

தேனப்பா கொட்டிதோர் விஷந்தான் சென்று

       சிவசிவா பழுப்பேறித் தங்கமாச்சே - -      138

 

                   சீனமாதி  முப்பூச் சுன்னம்

 ஆச்சப்பா இன்னமொரு முப்பூ சொல்வேன்

        அரகார ஆதி உப்புக் கிடைதான் கேளு

காச்சப்பா காசினதோர் கம்பிஉப்புங்

        கருவான சீனமுடன் மூன்றுங் கேளு

பேச்சப்பா ஒன்றமில்லை யிடைசரியாகக் கொண்டு

       பெருமையுள்ள சாரநீர் விட்டு ஆட்டி

மாச்சலென்று நினையாமல் கலவத்தாட்டி

       மக்களே யுருட்டியதை வட்டு பண்ணே  - -  139

        

பண்ணினதோர் வட்டதனை ரவிமுகத்தில் மைந்தா

        பாங்காகக் கனிந்திடவே காய்ந்து தானால்

புண்ணியனே மண்சீலை செய்து கொண்டு

         புந்தியுடன் புடம்போடு சுன்னமாகும்

கன்னிமயேஸ்வரி தனக்குப் பூசைசெய்து

       கருவான சுன்னமதில் கழஞ்சி வாங்கி

தன்னிமையாய் தாரத்துக்கங்கி பூட்டி

       தயவான சாரநீர் தன்னால் தானே        - - 140

 

தானென்ற கவசமதை நன்றாய்ச் செய்து

        தன்மையுடன் மண்சீலை யேழுஞ்செய்து

கோனென்ற குருபதத்தைத் தொண்டு பண்ணி

        குணமாக ரெண்டெருவில் புடத்தைப் போடு

மாவென்ற அரிதாரங் கட்டி நல்ல

      மகத்தான தன்னிறமாயிருகி நிற்குந்

தானென்ற ஆணவத்தைப் போக்கி மைந்தா

     தயவான தாரமதை யெடுத்துக் கொள்ளே - - 141

 

கொள்ளப்பா கட்டினதோர் தாரந் தன்னைக்

      கூசாமல் ரவிமதியி லீந்தாயானால்

விள்ளக் கேளாறேழு மாற்று காணும்

      விசையான தாய் சேர்க்க எட்டு மாற்று

சொல்லக்கேள் புலத்தியனே தகடாய்த் தட்டி

      சொல்லடங்காப் புடந்தனிலே யிறங்குந் தங்கஞ்

செல்லப்பா சிவயோக மார்கந் தன்னில்

      சிவசிவா மனதறிவால் தினமும் நோக்கே - - 142

 

 

நோக்குவது பூரணத்தை நோக்க வேணும்

      நுண்மையுள்ள குருபதத்தைப் பணிய வேணும்

நாக்குரிசை தனையகற்றிக் கனியே தின்று

      நன்றாக கங்கைதனை நவமாய்க் கொள்ளு

வாக்கு மனதொன்றாகி மனதைக் காரு

      மகத்தான ரேசகமும் பூரகமும் பண்ணு

தாக்குவது கும்பகத்தி லறிவை மூட்டு

       தன்மையுடன் யோகமதை தாக்கிப் பாரே - -143

 

பராப்பா மூலமதைப் பூசித்தாக்கால்

       பராபரத்தின் செயலைக் காணலாகும்

நேரப்பா பிறப்பிறப்பு ரெண்டுங் காணும்

      நீடுலகில் மகத்துவரே தெய்வமென்பார்

ஆரப்பா சொன்னாலு முலகமேயாம்

         அருளான பூரணத்தை யறியா மூடர்

கூறப்பா உலகமெல்லாஞ் செனித்தவாறுங்

         கூர்மையுள்ள நாதவிந்து ரெண்டுந்தானே - 144

 

ரெண்டான பொருளறிந்து பூசித்தோர்கள்

     நிலைத்தார்கள் கோடான கோடி மட்டும்

வண்டானத்து சென்று மதுவுண்டாப் போல்

      மகத்தான பூரணத்தை மருவிப் பாரு

அண்டர் கோனருள் பெருகி உலகமதில்

       அஷ்டமா சித்துகளுமாடி நிற்பான்

பண்டான பரப்பிரம்மாகியேதான்

       பாருலகில் குருவாகித் துலங்குவானே  - - 145

 

                                நாகரசமுப்பூச்சுன்னம்

 துலக்கமதா யின்னமொரு முப்பூ சொல்வேன்

      சோதியுள்ள புலத்தியனே சொல்லக் கேளு

வலக்கமதாய் நாகமுடன் ரசத்தைச் சேரு

       மகத்தான அடிமுடியுங் கூடச் சேரு

 பழக்கமதாய் வீரமுடன் புழுகு சேரு

      பங்கயமாங் கலவத்திலிட்டுக் கொண்டு

 மலர்க்கமல நீராலே யரைத்தாயானால்

      மைந்தனே மெழுகாகும் வட்டு பண்ணே  - - 146

 

 

 பண்ணியதோர் வட்டதனைக் காயப்போட்டு

     பக்குவமாய் மண்சீலை செய்துக்கொண்டு

உன்னியதோர் முழமளவு புடத்தைப் போடு

     உத்தமனே புடமாறி யெடுத்துப்பாரு

வெண்மையுள்ள சுன்னமதாய் நீறி நிற்கும்

      வேதாந்த ஆதினங் குருவாய் நிற்கும்

புண்ணியனே யிந்தநீறகதிகச் சுன்னம்

         பூரணத்தின் செயலதனால் சுன்னமாச்சே - - 147 

 

ஆச்சப்பா இச்சுன்னந் தாளகத்திலப்பி

      அடைவாக மண்சீலை யேழுஞ்செய்து

காச்சப்பா ரவிமுகத்தி னன்றாய்க் காய்ந்தால்

      கருகாமல் பத்தெருவில் புடத்தைப் போடு

மூச்சப்பா ஓடாமலுருகி நிற்கு

      மூவுலகு மெச்சுமடா இந்தத் தாரம்

தாட்சியொன்று மில்லையடா ரவிமதி யிற்றாக்கி

      தயவான பதினாறுமாற்றுப் பொன்னே - - 148

 

 

பொன்னாகுஞ் செம்புதனில் பத்துக்கொன்று

        பூட்டினால் வயதெட்டாய்ப் புகழ்ந்து காணும்

உண்ணான மதிதனிலே பத்துக்கொன்று

      ஊட்டினால் பத்தரைதான் தப்பாதையா

கண்ணான குடவனிலே பத்துக்கொன்று காட்டினால்

     ஏழரைக்கு அதிகங் காணும்

வண்ணமுள்ள மால்தேவி கூத்து மெத்த

      வாக்கடங்கா மனமடங்காச் சித்துமாமே - -  149

 

                          துரிசிமுப்பூச்சுன்னம்

 சித்தான துரிசி முப்பூச் சுன்னஞ் சொல்வேன்

    சித்தமுள்ள புலத்தியனே சொல்லக் கேளு

பத்தான சவுக்காரஞ் சீனங் கூட்டி

      பசுமையுள்ள துருசதுவுமிடையே சேர்த்து

சத்தான இணங்கனுடன் சூடன் சேர்த்து

     தயவா வாய்நீரால் கலவத்தாட்டு

முத்தான மெழுகதுபோல் நிற்குமப்பா

     மோசமென்று நினையாரே வட்டு பண்ணே - - 150

 

பண்ணியதோர் வட்டதனைக் காயப் போட்டு

     பக்குவமாய் காய்ந்தபின்பு மண்ணுஞ் சேர்த்து

தண்மையுடன் பத்தெருவில் புடத்தைப் போடு

      தணலாறி யெடுத்துப்பார் சுன்னமாகும்

புண்ணியவா னானாக்கால் நன்றாய் நீறும்

      புலத்தியனே யந்நீற்றைப் பதனம் பண்ணு

தண்ணியில்லாத் தளைகளிலே போட்டுப் பாரு

       தயவான வாருதிபோல் செலமுமாச்சே  - -  - - 151

 

செலமான நற்சலத்தை யொன்றில் வாங்கி

     சிவப்பான தாரமதில் சுருக்குத் தாக்கு

அழலான வூறலது அற்றுப் போகும்

      அதன்பிறகு சுன்னமதைக் கவசம் பண்ணு

உலகளந்த அரியுனுடதேவி தானு

      முண்மையுடன் கவசமாயுகந்து நிற்பாள்

கலகமது செய்யாமல் ரவிமதியில் தாக்கு

       கருணையுடன் பதினாறு மாற்றுப் பொன்னாம்  - -152

 

 

பொன்னான பொன்படைத்தால் பொன்னேயாகும்.

        பொல்லாத பாவியென்றால் மண்ணாப் போகும்

கண்ணான செயலறிந்தா லெல்லாமுண்டு

    கருவான குருவறிந்தா லெங்லாங் காணும்

விண்ணானபதியறிந்து அடியுங் கண்டால்

     வேணவிதங் கருவாகச் செய்ய லாகும்

பெண்ணாசை கொண்டவனோடிணங்காதையா

     பொருளாசை கொண்டவரைச் சினந்து தள்ளே – 153

 

சினந்து மிகத்தள்ளுவது யென்ன வென்றால்

     செயலிலாப் புளியுடனே யெண்ணெய் தள்ளு

உணர்ந்துவரு மீனிறைச்சிக் கஞ்சா வாகா

      உணர்வழிக்குங் கள்ளு சாராய மாகா

மணங்கமழும் பூரணத்தை யன்றி யொன்று

       வாய்க்கடங்கா மதம்பேசி நின்றாயானால்

இணங்குவது பூரணந்தான் கடினமாகும்

      என்மகனே புலத்தியனே யிந்த நூலே - - - 154

 

 இந்த நூலாயிரத்து இருநூறாகும்

      ஏகாந்தமான கருவதிலே தோற்றும்

அந்தமுடனாதி யென்ற பொருளே தோன்றும்

     அவையடக்க மென்றதெல்லா மிதிலே தோற்றும்

சந்தயங்களென்ற தெல்லாமிதிலே தோற்றும்

       விந்தையுள்ள வினோதமெல்லா மிதிலே தோற்றும்

வேடிக்கைசிமிட்டிகளு மிதிலே தோற்றும்

        தந்திரங்களென்ற தெல்லா மிதிலே தோற்றும்

சாயுச்சி பதவிகளும் மிதிலே தோற்றும்  -- -- - 155    

 

தோற்றாத கருக்கலெல்லா மிதிலே தோற்றுந்

        தூபமுதல் பரிசனமு மிதிலே தோற்றும்

ஆத்துமத்தின் கருக்களெல்லா மிதிலே தோற்று

        மருள்பெருக பூரணத்தினருமை தோற்றும்

பாட்டான பரிபாஷை யிதிலே தோற்றும்

      பக்குவத்தின் செயல்களெல்லா மிதிலே தோற்றும்

காட்டாத கருக்களெல்லா மிதிலே தோற்றுங்

      கபடமிட்டு வெகுளிதன்னில் நில்லாதையா  - - 156

 

 

ஐயனே புலத்தியனே மக்காய் நாமும்

      அருள்பெருகு மாயிரத்துஇருநூறுக்குள்

மெய்யான கருக்களெல்லா மிதிலே சொன்னேன்

      மேட்டியே திரியாமல் குருவைக் காரு

வையகமெல்லாந் திரிந்து அலைந்தாலுந்தான்

       வாய்க்குமோ இக்கருக்கள் வாயாதப்பா

கையான கையி னெல்லிக்கனி போல் மைந்தா

       கருவாக இந்தநூல் பதனம் பண்ணே -  -  - 157

 

பதனமப்பா வெகுபதன மிந்த நூலைப்

      பார்தனிலே மாந்தருக்கு ஈந்தாயானால்

விதனமப்பா சொல்லாலே யதிக சாபம்

       வேண்டினா லுன்னாலே தீர்க்கமாட்டாய்

மதனமதாய் மவுனமுடனிருந்துக் கொண்டு

     மகத்தான அஷ்டமா சித்துமாடு

இதமான பூரணத்தைத் தினமும் போற்று

      இன்பமுட னின்னமொரு முப்பூச் சொல்வேன் - - 158

 

                 வழலைமுப்பூச்சுன்னம்

 

சொல்லக்கேள் வழலை தன்னை

      சுத்தகெங்கை தன்னாலே சுத்தி பண்ணி

விள்ளக்கே ளஞ்சுதரஞ் சுத்தி பண்ணி

     வெண்மையென்ன சொல்வனடா வுகமை யில்லை

கல்லான வழலைதனை யெடுத்து மைந்தா

     கருவாக இடைசமனாய் வீரம்பூரம்

வல்லமையாய்க் கலவமதிலிட்டு மைந்தா

     வரிசையுடன் வெடியுப்பு தன்னாலாட்டே  - - - 159

 

 

ஆட்டிநன்றாய் பில்லைசெய்து வட்டுபண்ணி

     அருள்பெருகு மண்சீலை யதின்மேல் செய்து

காட்டான எருவதனில் புடத்தைப் போடு

     கனலாறி யெடுத்திடவே சுன்னமாகும்

தேட்டான தேட்டாகு மிந்தச்சுன்னந்

      திருவான பிரிதிவியுந் தாரந்தன்னில்

பூட்டாத கவசமது நன்றாய்ச் செய்து

      பொருந்தவே மண்சீலை யேழுஞ் செய்யே -  - 160

 

செய்ததொரு கவசமதைக் காயப் போட்டு

     சிவசிவா ரெண்டெருவில் புடத்தைப் போடு

துய்யமுள்ள தாரமது கட்டி நல்ல

      சோதியுள்ள அருணனைப் போலிருக்குமப்பா

பையவே கட்டியதோர் தாரந் தன்னைப்

        பாச்சடா வெள்ளிதனில் பத்துக்கொன்று

அய்யனே புலத்தியனே சொல்லக்கேளு

        அன்பாக பன்னிரண்டு மாற்றுமாச்சே - - - 161

 

 

ஆச்சப்பா குடவனிலே யெட்டுமாற்று

      அரகரா செம்புதனிலாறு மாற்று

பேச்சப்பா வெள்ளிசெம்பு தன்னிலீந்தால்

      பிசகாது எட்டரைதான் பேணிப்பாரு

நீச்சப்பா வெகுநீச்சு தாரக்கட்டு

      நேர்மை சொல்ல என்னாலே கூடாதையா

காச்சப்பா மூலமென்ற தீயில் தன்னைக்

   கருணைபெற மேல்மூலச் சுடரில் நில்லே  - - - 162

 

                     சவுக்காரப்போக்கு

 

நில்லப்பா சவுக்காரஞ் செய்ய மார்க்கம்

     நிலைபெறவே சொல்லுகிறேன் மைந்தா கேளு

வல்லதொரு குளக்கரை வாழ் பிண்டத்தானை 

     மகத்தான சிப்பியடா கும்பிடானை

விள்ளாமல் விள்ளுகிறோம் பூமிநாதம்

      விசையான அடிமுடியும் சிப்பிப்போக்கு

சொல்லாமல்  சொல்லுகிறோ மாதியந்தஞ்

   சொரூபமுள்ள வஸ்துவை நீ வணங்கிப் போற்றே - 163

      

 

வணங்குவது எப்படிதென்றால் மைந்தா

      மயானமதி னிசிவேளை தன்னிற் சென்று

இணங்குவதால் ருத்திரனைப் பணிந்து போற்றி

      இன்பமுடன் கைவசமே செய்து கொண்டு

குணங்களொரு மனதாக வயிரவனைப் போற்று

       குணமான ஆள்வள்ளிக்கிழங்கு தன்னை

முணங்காமல் நறுக்கியதைப் பாண்டத்திட்டு

      முன்னீரா லுப்பிட்டு அவித்திடாயே  -  -  164

 

அவித்ததொரு கிழங்கதனை எடுத்து மைந்தா

       அடிகனத்த வுரல்தனிலே யிட்டுக் கொண்டு

குவித்த தோரிருப்புலக்கை தன்னாற் குத்தி

       குமுறவே நன்றாக யிடித்து மைந்தா

தவித்தியமாய் நினையாமல் பாண்டத்திட்டு

     தயவான ரவிபீசங் கூடப் போட்டு

பவித்திரமா யைங்கோலத்தயிலம் விட்டு

     பதனமாய்க் கிண்டி யுண்டை செய்யே - - 165

 

செய்யப்பா வுண்டையது விளாங்காய்ப் போலே

      திரமாக வுருட்டையிலே யிறுகிப் போகு

மெய்யப்பா சொல்லுகிறோம் சவுக்காரத் துண்டை

      விருது பெற்ற சித்தர்கள்தான் செய்வாரப்பா

பொய்யப்பா சொன்னதினால் புலையனாவாய்

     புகழான பூரணத்தைத் தினமும் நோக்கு

கையப்பா வுதவுவது போலே மக்காள்

      கருவாக இன்னமொரு காரஞ் சொல்லுவேன் - -166

 

                          சவுக்காரமிருக்கிடம்

 

சொல்லக்கேள் புலத்தியனே சவுக்காரந்தான்

      சுயம்பாக இருக்குதடா அறிய மாட்டார்

விள்ளக்கேள் வஸ்துவாய் நின்று கொண்டு

     விளக்கொளிபோல் நின்று விளையாடுதய்யா

வல்லதொரு மயேந்திரமலைச் சார்பு தன்னில்

      வளர்ந்துநிற்குஞ் சவுக்காரம் புற்று போலே

சல்லாபமானதொரு சவுக்காரத்தை

      தனதாகக் கொண்டு வந்து நொறுக்கிடாயே  -167

 

நொறுக்கியது பாண்டமதிலிட்டு மைந்தா

      நுண்ணிமையாய்க் காட்டிவிட்டு முப்பூ விட்டு

குறுக்கி நன்றாய் வற்றுமட்டு மெரிப்பாயப்பா

        குழம்பான பருவமதில் தயிலம் வார்த்து

கருகி மிகப் போகாமல் கிண்டுகிண்டு

        கருகாத பதம்பார்த்து எடுத்துக்கொண்டு

உருக்கமுடன் குட்டோடே யுருட்டிப் போடு

      வுத்தமனே யாறியப் பின்னிறுகிப் போச்சே – 168

 

போச்சென்று விடுகாதே யின்ன மொன்று

       புதுமையுள்ள சவுக்காரஞ் சொல்லக் கேளு

மாச்சலொன்று மில்லையடா ஆதியந்தம்

       மைந்தனே சமூலமுங் கைவசமே செய்து

பேச்சொன்று சொல்லாமல் நொறுக்கிக் கொண்டு

      பெரிதான பாண்டத்திலிட்டு மைந்தா

காச்சுதற்கு சுத்தசலம் நிரம்ப விட்டு

       கசகாமல் கிண்டிவரில் கரைந்து போமே - - -169

 

கரைந்து மிகக்குறுகி நன்றாய் கொதிக்கும்போது

     கருகாத பதம்பார்த்துக் கிண்டுகிண்டு

திரைந்துமிகக் கடுகதின் மேலெண்ணெய் நிற்குஞ்

       சிவசிவா வெண்ணெய்தனை வடித்துக் கொண்டு

குறைந்துநின்ற கடுகதனை யெடுத்து மைந்தா

      கூசாமல் சுத்தசலம் தன்னில் வார்த்து

வரைந்து மிகக் கையாலே கரைத்து மைந்தா

      வட்டோடு தனிலூற்றி ரவியில் வையே  - - 170     

 

 

வையப்பா ரவிமுகத்திலுலர்ந்த பின்பு

      மக்களே பின்பொருகால் சுத்தசலம் விட்டு

நையப்பா ரவிபீசங்கூடப் போட்டு

      நன்றாக அடுப்பேற்றித் தீயை மூட்டு

மெய்யப்பா சொல்லுகிறேன் பதமாய்க் கிண்டி

      வெந்துவரும் பதத்திலே தயிலம் வார்த்து

செய்யப்பா திரண்டுவரும் பதத்தைப்பார்த்து

      சிவசிவா வுருட்டியதைத் திரமாய்த்தானே - 171

 

                     வேறு  சவுக்காரக்கட்டு 

 

தானென்ற சவுக்கார மின்னமொன்று

        தன்மையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு

வானென்ற கற்சுன்னம் படிதானொன்று

     வளமையுள்ள பூரணத்தின் சுன்னமொன்று

தேனென்ற விந்துப்பு சுன்னமொன்று

     திருவான ரவிபீசஞ் சுன்னமொன்று

மானென்ற அருநீரில் கரைத்துக் கொண்டு

    மகத்தானபாண்டத்தில்வாருவாரே   - -  - 172

 

வார்த்ததொரு பாண்டத்தை அடுப்பிலேற்றி

வாகாகத் தீயெரிப்பாய் வற்றுமட்டும்

பார்த்து மிகப் பதனமாய்க் கிண்டுகிண்டு

பாலகனே திரண்டுவரும் பதத்தைப்பாரு

சேர்த்துமிக ஒன்றாகத் திரட்டிக்கொண்டு

சீக்கிரத்தில் தயிலமதில் வார்த்துக்கிண்டி

போர்த்தியே யுண்டைசெய்வாய் விளாங்காய்போல

புகழாக இறுகியது கல்லுப்பாமே         175

 

                       சவுக்காரக்கட்டு (வேறு)

 

ஆமப்பா இன்னமொரு காரஞ் சொல்வேன்

கும்பிடுகற் சுண்ணத்தோடு

நாமப்பா காரமொடு சாரங் கூட்டி

நன்மையுள்ள வீரமொடு பூரங்கூட்டி

காமப்பால் கானற்பால் தன்னாலாட்டி

கருவான அறுவகையிற் கரைத்துக் கொண்டு

வாமப்பால் பாண்டமதி லிட்டு மைந்தா

வண்மையுள்ள அடுப்பேற்றி யெரித்திடாயே     174

 

எரித்துமிக வருகையிலே குழம்புபோல

இருக்குமே நன்றாகிக் கிண்டுகிண்டு

கரித்துமிக போகாமற் கிண்டும்போது

கருவான தயிலமதை அதிலேவாரு

உருத்துமிக அதில்வார்த்துப் பதத்தைப்பாரு

உருண்டுவரும் பதங்கண்டு உருட்டிக்கொண்டு

கிருத்துவங்கள் பண்ணாமல் விளாங்காய் போலக்

கிருபையுட னுருட்டையிலே யிறுகிப்போமே   175

 

                சவுக்காரக்கட்டு (வேறு)

 

போமென்று சொல்லாமலின்னமொரு

புதுமையுள்ள சவுக்காரஞ் சொல்லக் கேளு

நாமென்ற ஆணவத்தாற் சொன்னோமையா

நல்ல கல்லுப்புடனே கரியும் போடு

கோனென்ற வெடியுப்பு இந்துப்போடு

குருவான பூநீறு வளையலுப்பு

மானென்ற வீரமொடு பூரங்கூட்டி

மகத்தான அறுகையால் கரைத்துப்போடே   176

 

கரைத்திறுத்துப் பாண்டமதிலிட்டு மைந்தா

கருத்துறவே அடுப்பேற்றித் தீயைமூட்டு

முரைத்துமிகப் பொங்கியது போகாமற்றான்

மூர்க்கமுடன் கரண்டியதாற் கிண்டுகிண்டு

உரைத்துமிகக் கிண்டுகையில் திரளுமைந்தா

உத்தமனே அப்பதத்தி லுருட்டிப்போடு

கருத்துறவே சவுக்காரமதிககாரங்

காரணத்தால் பூரணத்தைக் கருத்தில் வையே   177

 

கருத்து மிக வுண்டானாலெல்லாமுண்டு

கண்கெட்ட குருடரைப் போலிருந்தாயானால்

உருத்துவுடன் திடத்தினாலிராது கண்டீர்

ஊடாடும் வாசியை நீ காண மாட்டீர்

மரித்துமொரு காரணங்களாட மாட்டீர்

மகத்தான சற்குருவை யறியமாட்டீர்

சிரித்துமிகக் கொண்டதினால் வருவதேது

சிவசிவா சிவயோகத் திறத்தைப் பாரே.           178

 

                    வெண்சாரைக்கற்பம்

 

பாரப்பா மயேந்திரகிரி தன்னிற் சென்று

பக்குவமாய் நீயிருக்கும்போது மைந்தா

நேரப்பா வெண்சாரை அதிலே வாழும்

நிச்சயமாயச் சாரை கண்டாயானால்

கூறப்பா உம்மென்று கும்பித்தேதான்

கூர்மையுடன் பதினாறு வுருவே செய்து

காரப்பா அச்சாரை வருகும் பாரு

கண்டவுடன் நடுமையம் பிடித்திடாயே    179

 

பிடித்தவுடன் பொசிக்கையிலே பொருந்தியோடும்

பின்பொருக் கலதைப்பிடித்துக் கொள்ளுகொள்ளு

படித்துமிக அஞ்சுதரம் பிடித்துக் கொள்ளு

பக்குவமாய் தினந்தோறுமிப்படியே கொள்ளு

அடுத்து மிகத்தினந்தோறுங் கொண்டால் மைந்தா

அசையாது யாக்கை தனக்கழிவே யில்லை

நடுத்தினமாய்த் தினந்தோறுங் கொண்டால் மைந்தா

நலமாக அதுக்கடியிற் கனிபொன்றாமே           180

 

                    கருநெல்லிக்கற்பம்

 

கனியானக் கருநெல்லி யஞ்சாறுண்டு

   கருவாக அவ்வனத்தில் பிரமதேவன்

தனியாகத் தவசிருப்பானவரைப் போற்றித்

     தருவான ஐந்தருகற்பகமேயென்று

பனியான பொருளறிந்து பணிந்தால் மைந்தா

      பாலகனே யென்றவருங் கருதானீவார்

இனியாத கசப்பென்று இருந்தால் மைந்தா           

      ஈடெச்சமில்லையடா ருசிபாராதே.      181

 

ருசியான கருநெல்லி கற்பங் கொண்டால்

       நுடங்காது காயமெல்லாம் வலுத்துப் போச்சு

ரிஷியான மூலரிஷிமிது தானப்பா

       நேர்மை வெண்சாரை நந்தி மூலமாகும்

உசிதமுள்ள ரிஷிமூலம் நந்திமூலம் ரெண்டு

      உண்மையுடன் தினந்தோறும் பூசித்தாக்கால்

பசியான தீபனங்களில்லை மைந்தா

          பராபத்தின் கிருபையுனால் பூரணத்தைப்பாரே    182

 

                         சவுக்காரக்கற்பம்

 

பூரணமா யின்னமொரு காரஞ் சொல்வேன்

        புத்தியுள்ள புலத்தியனே புகழ்ந்து கேளு

காரணமாய் நீகேளு எட்டாந் திங்கள்

          கன்னி யடிமூலமடா கருவை வாங்க

மாரணமாய் வாங்குதற்கு வகையைக் கேளு

         மருவியே வெல்லமதில் ரவிபீசங் கூட்டி

வாரண மாமுக்கணனை வேண்டிக் கொண்டு

      மடக்கொடிக்கு ஈந்திடுவாய் வரிசை பாரே   183

 

வரிசையுடன் மூன்றாநாளுப்பை வாங்கி

         மகத்தான வெந்நீரிற் போட்டு மைந்தா

பரிசமுடன் மறுநாள்தானுப்பை வாங்கிப்

         புண்ணியனே தண்ணீரிற் கரைத்துக் கொண்டு

பரிசான பாண்டமதிலிட்டு மைந்தா

         பக்குவமாய் ரவிபீசங் காரசாரம்

உரிமையுடன் பாண்டமதிற் கரைத்து மைந்தா

           உண்மையுட னடுப்பேற்றி யெரித்திடாயே   184

 

எரித்து மெள்ளப் பார்த்துக்கிண்டு மைந்தா

           இன்பமுடன் திரண்டுவரும் பருவந்தன்னில்

குறித்ததொரு தயிலமதைவிட்டு மைந்தா

              குருகவே கிண்டியதை யெடுத்துக்கொண்டு

பருத்து மிகப்போகாமலுண்டை செய்வாய்

             பக்குவங்கள் தப்பிவிட்டாலுதிர்ந்து போகும்

வருத்தி மிக எரிப்பதுவுங்குறைந்துதானால்

            மைந்தனே யிளகுமது வகையாய்ப் பாரே     185

 

பாரப்பா வெரிப்பதுவு மிஞ்சிற்றானால்

         பாகதுவு முறுகியது வுதிர்ந்து போகும்

சீரப்பா வெரிப்பதுவுங் குறைந்து தானால்

        சிவசிவா இளகியது போகும் போகும்

கூரப்பா தானெரித்துப் பதத்தோடப்பா

        குணமாக வுருட்டி வைக்க இறுகிப்போகும்

ஆரப்பா அறிவார்களிந்தக் காரம்

          அதீதமுள்ள காரமடா அருளைப் போற்றே   186

 

அருளான போதமெல்லா மடங்கும் வீடு

        ஆயிதிரோதாயி இருந்தடங்கும் வீடு

இருளான காமியந்தானிருக்கும் வீடு

      இச்சையுள்ள மாயமது இருந்த வீடு

மருளான பேய்க்கூத்து ஆடி நின்று

     மாயமெல்லாங் குடியிருக்குமகத்தாய்வீடு

கருவான கருவிகளும் நிறைந்த வீடு

     கருவழிந்து திகைத்து நின்ற காலன் வீடே -  - 187

 

வீடறிந்து பதவியுடனிருக்க மாண்பர்

       வீட்டிலுள்ள பேர்களைத்தான் விரும்பா மாண்பர்

காடறிந்து நாடறிந்து கருதா மாண்பர்

       கருவான பூரணத்தைக் காணாமாண்பர்

கூடறிந்து குடியிருக்க மாட்டாமாண்பர்

      குருவருளைப் போற்றாத குருட்டுமாண்பர்

பாடறிந்து பயனறிந்துக் கொள்ளாமாண்பர்

      பாவிகள்தான் மெத்தவுண்டு பார்த்திடாயே -  -188

 

                    கல்லுப்புக்கட்டு

 

பார்த்து மிகப்பணிய வேணும்

     பணிந்து மிகநில்லாட்டால் பண்பாய் தானுங்

கூற்றுவனுக் கிரையாகப் போவாய் மைந்தா

      கூறுடனே கூற்றுவன் தானாரென்றாக்கால்

நாற்றிசையுந் திரிந்தலைந்து பொருள்கள் தேடும்

      நன்மையில்லா திரோதாயி நன்மையப்பா

பூத்தமலர் வாசனைதான் கல்லுப்பாகும்

      பூமிவளர் பூவதுதா னாதமாச்சே  - - - 189

 

 

ஆச்சப்பா பிரிதிவியி னாதத்தாலே

      அடங்காத கல்லுப்பு கட்டிப் போச்சு

மாச்சலது இல்லாமல் கட்டிச் சென்று

     மகிழாமலந்திடைக்குக் காரசாரம்

பாச்சுவாய் சீனமுடன் துருசு கூட்டி

     பதறாமல் வீரமுடன் பூரஞ் சேர்த்து

தாட்சியொன்றுமில்லாம லொன்றாய்ச் சேர்த்து

     தவிராமல் முன்னீரில் கரைத்துக்கொள்ளே -  --  190

 

கொள்ளப்பா பாண்டமதிலிட்டு மைந்தா

        குருபரனைத் தொழுதிறஞ்சி அடுப்பிலேற்றி

அல்லப்பா சொல்லுகிறேன் தீயை மூட்டி

        அடித்தூரில் பற்றாது கிண்டுகிண்டு

வல்லமையாய் கிண்டிவரும் போதிலேதான்

       வைத்துமிகக் குழம்பான பருவந்தன்னில்

சொல்லக் கேளேரண்டத்தெண்ணெய்விட்டு

         சுருதியுடன் கிண்டினாக்கால் திரளும்பாரே     191

 

பாரப்பா திரண்டுவரும் பருவந்தன்னில்

        பதறாமல் விளாங்காய் போலுண்டை செய்து

பேரப்பா சவுக்காரமென்று சொல்லி

         பிசகாமலுண்டை தன்னைப் பதனம் பண்ணி

நீரப்பா நின்றதொரு குருவைப் போற்றி

       நிச்சயமாய் சவுக்காரவுண்டை தன்னை

வீரப்பா போவதற்கு சுத்தி கேளு

விசையான காரமுடன் சாரஞ் சேரே        192

 

சேர்த்துமிக ரவியில் வைக்க ஜெயநீராகுஞ்

      சிவசிவா அந்நீரில்வீரம்பூரம்

பார்த்துமிகச் சேர்த்திடவே செயநீர் காணும்

      பக்குவமாய் குருநீர் போல் பசுமையாகும்

வேற்று மைகளில்லாத சவுக்காரத்தை

     வெகுளாமல் செயநீரில் தேய்த்துப்போடு

மாற்றுமடா எண்ணெயெல்லாம் வழிந்து போகு

    மகத்தான காரமது சுத்தியாச்சே  -  -  -  193

 

 

ஆச்சப்பா சுத்திசெய்த காரமொன்று

      அந்திடைக்கு வீரமொன்று பூரமொன்று

பேச்சப்பா ஒன்றுமில்லை கலவத்தாட்டு

       பிசகாமல் லீராறு சாமமாட்டு

பாச்சப்பா ரவிமுகத்தில் வட்டு பண்ணி

       பக்குவமாய்க் காய்ந்தபின்பு மண்ணுஞ்செய்து

காச்சப்பா காட்டெருவில் புடத்தைப்போடு

      கருணையுள்ள சுன்னமதாய் நீறிப்போமே   -  194

 

                           தாரக்கட்டு

 

போமப்பா தரித்திரிய மெங்கே போச்சு

      புதுமையுள்ள சுன்னமதை வாய்நீராலே

நாமப்பா சொல்லுகிறோங் குழைத்துக்கொண்டு

      நன்மையுள்ள தாரத்துக் கங்கிபூட்டி

தாமப்பா மண்சீலை யேழுஞ்செய்து

       தவிராமல் ரெண்டெருவிற் புடத்தைப்போடு

ஓமப்பா தாரமது வுருக்கிக் கொண்டு

     முத்தமனே அருணனைப் போலிருக்கும் பாரே - - 195

 

பராப்பா சிவந்ததொரு காரந்தன்னை

      பாச்சடா வெள்ளியிலே பத்துக்கொன்று

சேரப்பா வெள்ளியது பழுக்கும் பத்தாய்

     சிவசிவா தாய்சேர்த்து தகடு தட்டி

காரப்பா புடம்போடு மூன்று திரமையா

      கருணைபெறப் பதினாறு மாற்றுப் பொன்னாம்

வீரப்பா அகற்றியதோர் செம்புதன்னில்

      விசையாக பத்துக்கு ஒன்று போடே  -  - - 196

 

போட்ட செம்பு எடுத்திடவே ஆறு மாற்றாய்

       புனிதமுடனிருக்குமடா அப்பா கேளு

தாட்டிகமாய் தாய் சேர்த்து தகடுதட்டி

      தன்மையுடன் மூன்றுபுடம் போட்டாயானால்

நாட்டதனில் விலையாகும் பத்து மாற்றாய்

        நன்மையுட னின்னமொன்று நவிலக்கேளு

கூட்டான குடவனைத்தான் சுத்தி பண்ணி

      கொடுத்திடு வாயெட்டில் ரெண்டு வெள்ளிதானே - 197

 

 

தானென்ற குடவனிலே வெள்ளிசேர்த்து

     தன்மையுடன் பதினாறுக் கொன்றேயீந்தால்

தேனென்ற வயதுதானெட்டு மாற்றாய்

    தீர்க்கமாய் நிற்குமடா தாயைச்சேர்த்து

மானென்ற தகடுதட்டிப் புடத்தைப் போடு

     மைந்தனே வயது பனிரெண்டு மாற்றே

கோனென்ற திருவருளை வணங்கிப் போற்றி

     குருவான பதியறிந்து அமுதங்கொள்ளே -  - - 198

 

அமுதமென்ற நாதமடா வாயுவாச்சு

     அப்பனே சுக்கிலமோ விந்துவிந்து

குமுதமுடன் ரெண்டல்லோவொன்றாய் சேர்ந்தால்

        குருவான பதிகாட்டும் வாசியாச்சு

உமிருகிற வாசியது எங்கேயென்றரல்

         உத்தமனே யடியான மூலமாச்சு

நிமிர்ந்து கொண்டு மூலத்தை கண்ணாற்பாரு

       நேரான சூரியன்போல் வட்டமாச்சே  -  - 199

 

அட்டமாசித்திகளுமதிலுண்டாச்சு

      அருள்பெருகும் போதமே யதிலுண்டாச்சு

நிஷ்டையொடு சமாதிகளு மதிலுண்டாச்சு

       சொல்லவொண்ணா வசியமெல்லா மதிலுண்டாச்சு

கட்டாத சரக்கெல்லாமிதிலே கட்டுங்

      கவனமென்ற குளிகையுமே யிதிலுண்டாமே - 200.

 

 அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 001 -  100

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 201 -  250