பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 / பாடல்கள் 251 - 300

 



அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 001 -  100

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 101 -  200

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 201 -  250


 புசண்டருக்குச் சொன்ன தாரக்கட்டு

 பாரப்பா இன்னமோரு வகையைக் கேளு

     பரமான புசுண்டருக்குப் பகர்ந்த விந்தை

நேரப்பா நின்றதொரு கல்லை வாங்கி

      நினைவாக அந்திடைக்குக் காலுங் கூட்டி

சீரப்பா அந்திடைக்குச் சீனஞ் சேர்த்து

     சிவசிவா மூன்று மொன்றாய் கலவத்திட்டு

அறுவகை யினீராலாட்டி மைந்தனே

     வட்டாக வுலர்த் திடாயே   -       -       250

 

உலர்ந்ததொரு வட்டுக்கு மண்ணுஞ் செய்து

      உத்தமனே நூறெருவில் புடத்தைப் போடு

அலர்ந்து மிகத் தீயாறி யெடுத்துக் கொண்டு

     அப்பனே கவசமது யிட்டுப் பாரு

மலர்ந்ததொரு பூப்போலே நீறி நிற்கு

      மகத்தான சுன்னமடா என்ன சொல்வேன்

கலந்ததொரு சுன்னமுடன் வீரம்பூரம்

     கருவான வாய்நீராலரைத்துக் கொள்ளே  - - 251

 

அரைத்ததொரு மருந்ததனைத் தாரத்துக்கு

      அப்பனே கவசமது அன்பாய் செய்து

விரைத்துமே மண்சீலை யேழுஞ் செய்து

      விரைக்கவே ரவி முன்னே காயப் போட்டு

மறைக்க மனமறிவாலே புடத்தைப் போடு

      மைந்தனே புடமாறி யெடுத்துப் பாரு

தறைக் கடங்கா ரவி போலே மேனியாகி

       தன்மையுடன் கட்டுமடா தாரந்தானே   -  -  252

 

தாரத்தின் வேதை தன்னை யார்தான் காண்பார்

      தன்னிலையைத் தானறிந்தோன் காண்பானையா

பேரொத்த சித்தர்கள் தான் கண்டாரானால்

     பெருமைதனைத் தானடக்கி மலைமேல் போவார்

பாரொத்த பூமியுட நாதங் கண்டால்

      பலிக்குமடா வாதமுடன் யோகந்தானுங்

காரத்தின்செயலதனையார்தான்காண்பார்

    கருணையுள்ளபூரணத்தோன்காண்பானபாரே – 253.

 

பாரறிந்து வூரறிந்து குணத்தைக் கண்டு

     பலமான வீரத்தை யறியான் மட்டை

கூரறிந்து குருவறிந்து வணங்காப் பாவி

     குணமில்லா சண்டாளர் மெத்தவுண்டு

நேரறிந்து பேசாதலுத்த ரோடே

     நீ மகனே சொல்லாதே பாவம் பாவந்

தூரறிந்து வேரறிந்து கொம்பைக் கண்டு

     தூண்டாத மணி விளக்கைக் கண்டு போற்றே    - 254

 

போற்றுவது ஆரையென்றால் பூரணத்தை மைந்தா

      புதுமையுள்ள பூரணமே தெய்வந் தெய்வந்

தேற்றுவதால் மனந்தேறி நிலையில் நின்றால்

      சிவசிவா கயிலாயத் தேகந் தேகம்

பூத்தமலர் வாசனையை யார்தான் காண்பார்

     புதுமையுள்ள பூரணத்தைக் கண்டோன் காண்பான்

சாத்துநிலை தானடங்குங் குருவைக் கண்டு

     கருவை யறிந் துறுதி பெறக் காய சித்தே   -   -255

 

                            தாளகமெழுகு

சித்தான தாளகத்தை யெடுத்துக் கொண்டு

      சிவசிவா மகாரசமுங் கெந்தி கூட்டி

முத்தான கலவத்திலிட்டுக் கொண்டு

        முசியாமல் சாரநீர் விட்டு ஆட்டி

சத்தான தயிலமதில் பின்பு ஆட்டு

     சதாசிவன் போல் மெழுகாகுந் தன்மையாக

பத்தான மதிதனிலே யீந்தால் மைந்தா

     பாலகனே பதினாறு வயது ஆமே  -   -256

 

ஆமப்பா குடவனிலே யீந்தா யானால்

        அப்பனே ஆறரைக்கு அதிகங் காணும்

நாமப்பா வெள்ளி செம்பி லீந்தா யானால்

      நன்மை யுடனெட்டு வயதாகும் பாரு

தாமப்பா இவ்வேதை புசுண்டர் வேதை

     தன்மையுடன வருடைய கற்பங் கேளு

காமப்பால் கானற்பால் ரெண்டுங் கொண்டு

      கருவாக பூரணத்தைப் பொசித்தான பாரே  -  - 257

 

                         புசுண்டஷி கற்பம்

பூரணமென்றா னுமக்குத் தெரியுமோதான்

     புத்தியுள்ள புலத்தியனே சொல்லக் கேளு

காரணத்தின் குருவருளால் காண வேணுங்

      கருவான சாரணத்தைக் கேளு மைந்தா

சீரணித்ததேகமென்றாலறிவானோசொல்

     சிவசிவாஐந்துருவுமாதியாதி

மாhணித்துக்கொண்டுவந்துஐயாகேளு

     மவுனமதில்கறியுப்பைவகையாகச்சேரே -  - 258

 

சேர்ந்தப் பின்பு ரவிமுகத்தில் வைத்துப் பாரு

     சிவசிவா மெழுகது போலிருக்கு மப்பா

பார்த்த பின்பு ரவி முகத்தில் நவநாள் காய்ந்தால்

      பாலகனே யுப்பாகும் பசுமையாக

கார்த்ததொரு காரசாரத்தி னுப்பை

     கருணையுடன் தினந்தோறுங் கொண்டால் மைந்தா

மூர்த்திகர முண்டாகி தேகஞ் சித்தா

     மூதண்டராஜரிஷிமுறைதானப்பா   -  -    259

 

                             சூதரிஷி கற்பம்

ஆமப்பா இன்னமொரு விபரஞ் சொல்வே

      னருள் பெருகுஞ் சூதமுனிக் கருளும் வார்த்தை

நாமென்ற விஞ்சையடா ஆதியுப்பு

      நலமான வுப்புடனே துருசு சேர்த்து

காமப்பால் வெடியுப்பு நேராய் சேர்த்து

      கலவத்தில் மூன்று மொன்றாய் சருவாலாட்டி

வாமப்பால் விட்டாட்டிப் புடத்தைப் போடு

       மகத்தான சுன்னமடா நீறிப்போமே    -  - 260

     

நீறியதோர் சுண்ணாம்பில் வீரம்பூரம்

      நேரப்பா நேர்பாதி சேர்த்துக் கொண்டு

வூறியதோர் வாய்நீரால் கலவத்தாட்டி

     உத்தமனே நன்றாக அரைத்தப் பின்பு

காரியமாய் ரவிமுகத்தில் காய வைப்பாய்

     கருவாக வுருட்டியதை வட்டு பண்ணி

ஆறியதோர் மண்சீலை யேழுஞ் செய்து

     அப்பனே புடம் போடச் சுன்னமாச்சே  -  -  261

 

ஆச்சப்பா சுன்னமது வாய்நீராலே

      அப்பனே பூரத்துக் கங்கி பூட்டி

பேச்சப்பா வொன்றுமில்லை மண்சீலை செய்து

       பிசகாமற் புடம்போட நீறிப் போகும்

காச்சப்பா அந்நீரில் வீரம் பூரங்

      கருவிட்டுமே மத்திச்சு துருசுக் கப்பி

பாச்சப்பா மண்சீலை யேழுஞ் செய்து

    பக்குவமாய்ப் புடம்போடச் சுன்னமாச்சே   -  262

    

சுன்னமென்ற துருசினுட சுன்னந் தன்னை

       துருசான ரசந்தனக்கு பத்துக் கொன்று

புண்ணியனே தான் கொடுத்து வாய்நீர் விட்டு

        புதுமையுடன் மத்திக்கத் திரண்டு போகும்

தண்மையுடனுருட்டி யதை சுன்னத்துள்ளே

      தான் முழத்திற் புடம் போட வுருகி நிற்கும்

உண்மையுடன் பரியதனை யுருக்கிக் கொண்டு

      வுருண்டு நின்ற ரசங் கொடுக்கக் களங்கதாச்சே-263

 

களங்கமில்லா களங்கதனை யெடுத்துக் கொண்டு

      கருணை பெற செம்புதன்னி னூற்றுக் கொன்று

மலங்காமல் கொடுத்துடனே மாற்றுப் பத்தாய்

     வரிசை பெறக் காணுமடா வெள்ளீக்கீந்தா

லுளங் கனிந்த பதினாறு மாற்று காணு

     முத்தமனே குடவனிலே யீந்தாயானால்

ஜெலங் கனிந்த வூறலெல்லா மற்று

      நல்ல தீர்க்கமுட னெட்டுவயதாகும் பாரே 264

 

பாரப்பா ரசக் களங்கை நொறுக்கிக் கொண்டு

      பழுதில்லா கெந்திதனை யிடையே செய்து

சாரப்பா வீரமுடன் பூரம் லிங்கந்

      தயவான மனோசிலையுங் கூடச் சேர்த்து

நேரப்பா கலவத்திற் பொடி யதாக்கி

      நேர்மையுள்ள குப்பிதனி லரை மட்டிட்டு

சீரப்பா மண்சீலை யேழுஞ் செய்து

    சிவசிவா வாளுகையிற் வைத்துப் போற்றே  - 265

 

போற்றியே குருபரனைத் தொழுது கொண்டு

       புதுமையுள்ள சருகுகம்பூவிற் கால் மைந்தா

தேற்றியே தீயெரிப்பா யாறு ஜாமம்

      சிவசிவா செந்தூர மென்ன சொல்வேன்

நாற்றிசையும் போற்றுமிந்த செந்தூரந்தான்

     நலமாகப் பணவிடைதான் கொண்டாயானால்

பார்த்திபனே யாக்கை தனக்கழிவே யில்லைப்

      பணிந்திடுவாய் குருபரனைப் பணிந்து போற்றே - -  266

 

                             பிர்ம ரிஷி கற்பம்

பணிந்து மிக இன்னமொரு கருவைக் கேளு

     பார்தனிலே பிரம ரிஷிக் கருளும் வார்த்தை

கனிந்து மிகப் பூரணத்தைக் கனிந்து கொண்டு

      கமலமதிலே யிருந்த மதுவை வாங்கி

அணிந்ததொரு கமலமதில் விட்டு மைந்தா

     அருள் பெருகுங் கங்கைதனை யதனில் விட்டு

துணிந்து மிகரெண்டு மொன்றாய் ரேசித்தே தான்

          துலங்கு ரவி முகந்தனிலே காய வையே - - 267

 

வையப்பா இந்த விதம் பத்து முறையப்பா

      வைத்ததினால் காரமுடன் சாரம் ரெண்டும்

மெய்யப்பா சொல்லுகிறேன் ரெண்டு மொன்றாய்

      விரவியே திருநீறாய்ப் போகும் பாரு

செய்யப்பா அந்நீற்றில் முன்போல் பத்து

      தெசதீட்சை பண்ணி விட சேதி கேளு

அய்யனே யமுதரசமான கற்பம்

    ஆருக்கும் விள்ளாதே யருமை தானே  - -268

 

தானென்ற அமுதரச கற்பங் கொண்டு

      தரணி தன்னில் பிரம ரிஷி நானேயென்று

வூனென்ற வுயிர்த்தனைத்தான் திஷ்டிப்பாலே

       யுண்டாக்கி யண்டமெல்லா மயனாய் நின்று

கோனென்ற குருவாகி குருவு மானான்

        குருவான பிரமகுரு ஆர்தான் காண்பார்

நானென்ற ஆணவத்தை யொடுக்கி மைந்தா

      னன்மையுட னிந்த நூல்பதனம்பண்ணே  - - 269

 

இந்த நூலாயிரத்திரு நூறுக்கு

      ளிதமான கருக்கிடையுங் குருக்கிடையு மப்பா

சந்தேக மில்லாமல் சொன்னேன் வாக்யந்

      தன்மையில்லா மானிடர்க்கு சாற்றினாக்கால்

பந்தமிலாப் பாசமது சூழ்ந்துக் கொண்டு

      பாழ்நரகில் வீழாதே பதனஞ் சொன்னே

னந்தமுள ஆதியந்த மிதிலே தோன்று

  மாருக்கு மிந்த நூலளிக்கொணாதே   -   -  270

 

ஒன்றான கற்பமடா பிரம கற்ப

    முண்மையுடன் செய்தவனே சித்தன் சித்தன்

பண்டான சோதியடா பரப்பிரம மாச்சு

     பாருலகத்தில் பூரணத்தைப் பணிய மாட்டார்

நன்றான பிரமகுரு ஆர்தான் காண்பார்

       நன்மையுடன் கண்டவனே சீவன் முத்தன்

உண்டான சேதியொன்று முரைக்க மாட்டார்

      உரைத்தாக்காலரு நரகமுண்டாம் பாரே  - - 271

 

பாரப்பா நரகமதில் சேர நன்றே

  பராபரத்தினருள் பெருகியிருக்க நன்றே

நேரப்பா நின்ற பொருள் காண வேணும்

      நிருமலமாம் பிரமகற்பங் கொள்ள வேணும்

காரப்பா அடிமூலங் காக்க வேணுங்

    காராட்டாற் சகலசித்துங் காணா தோடும்

ஆரப்பா அறிவார்கள் காரசாரம்

   அடங்கி நின்ற பொருளறிந்து அருளைப் போற்றே – 272

 

அருளான பூரணமே போதம் போதம்

     ஆதியென்ற பிரம குருவான போதம்

மருளான மயக்கமெல்லாந் தீர்த்த போத

     மனதடங்கி யொருமையாய் மகிழ்ந்த போதந்

திருவான லட்சமிப் பெண் வாசமான

      தேசி யென்ற குருதேசி நின்ற போதம்

உருவான அருவுருவா யமர்ந்த போதம்

      உண்மை யென்ற போதமதிலுகந்து நில்லு  -  - 273

 

நில்லென்ற நிலையறிந்து நின்றால் மைந்தா

      நிலையான போதமதை நீதான் காண்பாய்

கல்லென்ற கடுங்காரக் கல்லை மைந்தா

        காசினியோ ராரறிவார் கருதிப் பார்க்க

அல்லென்ற கருவிகளை யகற்றினாக்கால்

      அருள் பெருகும் பிரமநிலை யருளைக் காண்பான்

தில்லை நடராஜருட செயல் கண்டாக்கால்

     சிவசிவா பிரம ரிஷி யாவாய் பாரே  -   -   274

 

பராச ரிஷி கற்பம்

பாரப்பா இன்னமொரு புதுமை கேளு

     பராசமுனிதான் செய்து பகர்ந்த வித்தை

ஆரப்பா அறிவார்க ளதீத வித்தை

      அன்பான புலத்தியனே யுனக்குச் சொல்வேன்

நேரப்பா பிரமகுலத் துதித்த தொன்று

      நிச்சயமாய் மூலமதை சமூலங் கொண்டு

வீரப்பா செய்யாமல் ரவியிற் றாக்கி

     வீறடங்கிக்காய்ந்தபின்புவித்தைகேளே  -  - 275

 

கேளப்பா கல்லுரலி லிட்டு மைந்தா

        கிருபையுள்ள இருப்புலக்கை தன்னாற் குத்தி

கேளப்பா வாராமல் கொழித்துக் கொண்டு

      கூர்மையுட னிடித்திடுவாய் தவிடதாக்கி

வாளப்பா இடித்ததை நீ சமூலங் கொண்டு

       மைந்தனே தண்ணீரில் பிசைந்து வைத்து

நீளப்பா மிஞ்சாமல் பிசறிக் கொண்டு

       நேரான ரவிமுகத்தில் வைத்துப் போற்றே - - 276

 

போற்றுவது தசதீட்சை முகிந்து தானால்

      புதுமையுள்ள வுப்பது தானென்ன சொல்வேன்

தாட்டிகமா யமுதரச வுப்பை மைந்தா

     தாளியென்ற பீங்கானி லிட்டுக் கொண்டு

பூட்டுவாய் சூடனொன்று இணங்க னொன்று

     பொல்லாத வீரமொன்று கருவுப் பொன்று

நாட்டியே ஒன்றாகச் சேர்த்துக் கொண்டு

      நலமான பானைவாய் சில்லுப் போடே  -   -  277

 

 

போட்டபின்பு மண்சீலை யேழுஞ் செய்து

      புதுமையுட னிடுப்பளவில் குழியில் வைத்து

மாட்டுவா யானையுட கட்டம் போட்டு

     மைந்தனே மணல் கொட்டி வைத்துக் கேளு

தாட்டிகமா யதின் மேலே திரணை போட்டு

      தன்மையுடன் தானிருந்து தன்னைப் போற்றி

நாட்டுவாய் லட்சமுறு நீலகண்டம்

    நன்மையுடன் தினந்தொழுக நன்மையாமே  - - 278

 

நன்மையது என்னவென்றால் மைந்தா கேளு

      நலமான மெழுகாகு மண்டலத்திலப்பா

வுண்மையுட னம்மெழுகை யெடுத்துக் கொண்டு

    வூட்டுவாய் தினந்தோறு மெழுகு போல

திண்மை யென்ற சடலமது நன்மையாகுஞ்

     சிவசிவா யாக்கையது பிலத்துப் போகும்

தன்மையென்ற மெழுகினுட பெருமை தன்னைச்

     சதாகாலம் போற்றிப் பூரணத்தை நோக்கே - - 279

 

பூரணத்தை நின்றதொரு மெழுகு தன்னில்

      புதுமை யொன்று சொல்லுகிறோம் புகலக்கேளு

காரணமாய் நின்ற களிம்பான செம்பில்

      கருத்துடனே நூற்றுக்கு ஒன்று போடு

மாரணமாய் போகுமடா செம்பு தானும்

     மாற்றேது என்னவென்றால் மைந்தா கேளு

நாரணத்தின் பொருளதினால் நூறு மாற்று

     நன்மையுடன் காணுமடா நாம் சொன்னோமே  -280

 

                                    ஆறாதாரம்

சொன்னதொரு மூலத்துக் கப்பால் பாரு

          துலங்குமடா ஆறுதலம் பிர்மா வீடு

நன்னயமாய் நகாரமென்ற பூமிக்குள்ளே

            நாடிநின்ற நாசியினால் பிறப்பு மாச்சு

தண்மையுட னதின் மேலே மாலின் வீடு

            தளமான  பத்தி தழும் பிறையு மாகும்

உண்மையுடன் ஜெகத்துக்குத் தாயாய் நிற்பாள்

ஓங்கார மயத்துக் காதி தானே      - 281

 

ஆதியாந் திரோதாயி யமர்ந்த வீடு

            அருளான போத மிகுந் தாடும் வீடு

நீதியாங் காமியத்தை நிமிர்த்தும் வீடு

            நினைவில்லா மாய மெல்லாம் நிறைந்த வீடு

பேதியா மனமுழன்று பெண்ணைத் தேடி

            பேய்க் கூத்தா யாட்டிவிக்கும்  பிலத்த வீடு

சோதியென்று வரமளித்த துரைச்சி வீடு

            சுகமாகக் கண்டறிந்து மேலே பாரே   - 282 

 

           பாரப்பா அதின்மேலே பன்னிரண்டுக்குள்

    பானுவங்கே யீராறு முகமாய் நிற்கும்

நேரப்பா நோவென்றால் கண் கொள்ளாது

     நேர்ந்தாலும் நடுமனையில் கோணமாகி

சீரப்பா சிகாரமென்ற எழுத்து நிற்கும்

     சிவசிவா ருத்திரனும் ருத்திரியு நிற்பார்

காரப்பா நடுமனையில் நின்ற காட்சி

    காணவென்றால் கண்கொள்ளாக் காட்சியாமே - - 283

 

காட்சியா மவருடைய கூத்தைக் கேளு

     கடும் பசியும் நித்திரையும் பயம் சையோகம்

மாச்சல் செய்யும் விதனத்தால் காமமீறி

      வலுமையுட னரை திரையுமாகி நிற்கும்

பாச்சலென்ற சடமழிந்து பாழாம் வீடு

    பரஞான யோகமெல்லாம் பறந்து போகும்

தாட்சியுட னதினுடைய கூத்தைக் கண்டு

     தாண்டி நின்ற அகாரமதின் தன்மை கேளே – 284

 

கேளப்பா பதினாறு வயலின் வீடு

      கெடியான காம முதல் குரோதம் லோபம்

மாளப்பா மோகமொடு மகத்தினோடு

     மகத்தான பிறப்பற்று மாளப் பண்ணும்

கோளப்பா இல்லாத பரத்தின் வீடு

       குறியாக அதின் குணத்தைக் கூறக் கேளு

நாளப்பா மேல் மூலம் அகார வீடு

    நாத சதாசிவனு மனோன்மணி யுந்தானே -  -  285

 

 

தானென்ற மனோன்மணியுஞ் சதாசிவனுங் கூடி

     தயவாக ரெண்டிதழிலிருந்தாரப்பா

கானென்ற நால்வருந்தான் போற்றி செய்ய

     கண்ணடங்காப் பிரபையொளி கருதிப்பாரு

மானென்ற சக்கரத்திலிருந்து கொண்டு

     மகத்தான வித்தை யெலாமகிழ்ந்து பாரு

வீணென்ற வறுமை யுமாய் மனதுமாகி

     வித்தான கருவினுள் சுத்துமாச்சே  - -  - 286

 

ஆச்சப்பா வுலகத்தில் கர்ம தர்மம்

     ஆனதொரு சரிதை முதல் கிரிகை யாகி

காட்சியதோர் யோகமுமாய் ஞானமாகி

     கரைகொள்ளா நூலாகி கருவுமாகி

தாட்சியில்லாத் தெளிவாகி நினைவுமாகி

     சகலமெலாந் தோற்றுஞ் சாக்கிரமுமாகி

பேச்சாகிப் பொருளாய் மேலவழியைக் காட்டப்

    பெருமையுள்ள குருபதத்தைப் பூசிப்பாயே - -287

                    ரோமரிஷி வேதை

பூசித்த கருமான மொன்று கேளு

     புத்தியுள்ள ரோமரிஷி புகழ்ந்த வித்தை

நேசித்த சருவான வுப்பு ரெட்டி

      நிருமலமாங் கல்லுப்பு கூடச் சேர்த்து

ஆசித்த ரவிபீசம் நாலுக்கொன்று

      அடைவாக மூன்று மொன்றாய் கலவத்திட்டு

பாசித்த விந்துநீர் தன்னாலாட்டி

      பக்குவாமா யுருட்டியதை வட்டு பண்ணே  -  - 288

 

பண்ணப்பா வட்டதற்கு மண்சீலை செய்து

      பக்குவமாய் காடையொரு புடத்தைப் போடு

நன்னயமாய் நீறியது சுண்ணாம்பாகும்

      நாடகத்தி லாடுகிறகு ருவிதப்பா

தண்மையென்ற சுன்னமுடன் வீரம்பூரந்

     தாக்கி நன்றாய் மத்திப்பாய் வாய்நீராலே

உண்மையென்ற துருசதற்குக் கவசம் பண்ணி

     உத்தமனே மண்சீலை யுகந்துசெய்யே  - - 289

 

செய்யப்பா கவசமதை யுலரவைத்து

     தியானத்தின் தணல் மேலே வைத்தாயானால்

மெய்யப்பா சொல்லுகிறே னீறிப் போகும்

      மேன்மையுள்ள சுன்னமதை யெடுத்துக் கொண்டு

வையப்பா தாளகத்துக் கங்கி பூட்டி

        வரிசை பெறக் கவசமதை வலுவாய்ச் செய்து

பையப்பா ரெண்டெருவில் புடத்தைப் போடு

       பசுமையுள்ள தாரமது கட்டிப்போச்சே -  -    290

 

போச்சப்பா தாளகத்தி னூறலெல்லாம்

      புகழான ரவிபோலே யிறுகி நிற்கும்

பேச்சப்பா வொன்றுமில்லை வெள்ளி நூற்றில்

     பிலமான தாரமொன்று ஈந்தாயானால்

தாட்சியில்லாப் பதினாறு மாற்றுத் தங்கந்

      தடையறவே காணுமடா தவக்கமில்லை

மாச்சல் செய்யுங் குடவனிலே நூற்றுக்கொன்று

    மக்களே யொன்றிடவே யெட்டு மாற்றே -   -   291

 

எட்டுரெண்டு வெள்ளிசெம்பை யுருக்கிக் கொண்டு

     இன்பமுள்ளதா மதிற்காறே யீவாய்

மட்டிலா அஞ்சாறு மாற்று காணு

     மகத்தான வேதையடா தாரந்தாரம்

அட்டியில்லா தாரமதுக் காதாரந்தான்

     ஆரறியப்போகிறார் ஐயா ஐயா

சிட்டமுட னிம்முறைதான் நல்ல பிரயோகந்

     திடமானரோமரிஷிகற்பங்கேளே  -  -  292

     

                     பிரம ரிஷிகற்பம்

கற்பமென்று சொல்வதெல்லாங் காயாதி கற்பங்

    கருவறிந்து வுருவறிந்து கருவைப் பார்த்து

அற்பமென்று நினையாம லாதி யுப்பை

      அறுசுவை யோடெடுத்து வந்து அறுநீ  விட்டு

மெய்ப்பாக அப்புமுப்பு மொன்றாய்ச் சேர்த்து

       விசையான ரவிமுகத்தில் வைத்துப் பாரு

வுற்பனமாய்க் கயப்பேறி கற்பமாகும்

      உடலினட வலுவறிந்து வூட்டுவாயே   -  - 293

 

ஊட்டுவது தின்குளது அளவு கொண்டு

     வுறுதிபெறக் கொண்டதின் மேற் கழிஞ்சி கொள்ளு

நாட்டுவது பூரணத்தில் மனதை நாட்டு

      நன்றான பேரொளியில் நின்றால் மைந்தா

வாட்டரவு வொன்றுமில்லை நரைதிரையு மாறும்

     மகத்தான காயமது வலுத்துப் போகும்

தாட்டிகமாய் நின்றதொரு காயாதி கற்பந்

      தனையறிந்து கொண்டவனே சித்தனாம்  -  - 294

 

சித்தான காயாதி கற்பந் தன்னைச்

      செகத்திலுள்ள மானிடரோ காணப் போறார்

முத்தான மகிமைதனை யார்தான் காண்பார்

      மூர்க்கமுள்ள சத்தரிஷி முனிவர் காண்பார்

வற்றாத பூரணத்தைக் கண்டால் மைந்தா

     வலுவாக் காயசித்தி யோகங் காணும்

பத்தான தசதீட்சை பருவங் கண்டால்

     பலிக்குமடா சகலசித்தும் பலிக்குந்தானே  -  295

 

தானென்ற தத்துவத்தை யறிந்துக் கொண்டு

     தண்மை யென்ற பூரணத்தைப் பணிந்து கொண்டு

கோனென்ற குருவருளைப் போற்றிக் கொண்டு

    கும்பமுனி தஞ்சமென்று நின்றால் மைந்தா

மானென்ற மதியமுதங் கசிந்து காணு

     மார்க்கமுள குண்டலியின் மகிமை தோன்றும்

ஊனென்ற வூனறிந்தா லெல்லாஞ் சித்தி

     ஊடாடும் வாசிதனை யுற்றுப் பாரே -  -296

 

பாரென்று சொன்னீரே கும்பமுனி யய்யா

    பராபரத்தின் வகைதனை யார்தான் காண்பார்

நேர் நின்ற வாசிதனை யறிவாற் பற்றி

     நிலையான குருபதத்தில் நேர்ந்துக் கொண்டால்

தூரென்ற அடிமூலங் கணேசன் கோவில்

     துலங்குமடா கற்பத்தில் சூட்சமெல்லாம்

வேறென்று மயங்காதே ஐயாஐயா

     விஞ்சையென்ற மூலமந்திர மிதுதான் பாரே - -297

 

                     பூமியுப்பு மகிமை

பாருப்பு மகிமைதனை சொல்லக் கேளு

     பாரீன்ற பூமியுடநாதமப்பா

ஆருப்பு மகிமைதனைக் காணப் போறார்

     அருளான விந்துநீர் தன்னிற் போட்டு

சேருப்பு ரென்றுமொன்றாய்ச் சேர்த்துக் கொண்டு

      சிக்கெனவே ரவிமுகத்தில் வைத்துப் பாரு

காருப்பு இப்படியே பத்துமுறை செய்தால்

     கருவான ரெண்டுமொன்றாய்க் கட்டும் பாரே – 298

 

பாரப்பா கட்டியதோ ருப்பு ரெண்டு

    பகராத கல்லுப்பு ரெண்டுங் கூட்டி

சேரப்பா ரவிபீசம் ரெண்டிலொன்று

    சேர்த்து மிகக் கலவமதில் சேர்த்துக் கொண்டு

வாரப்பா மூன்றிலொன்று துருசு சேர்த்து

     வாரிதியா மறுவகையின் தன்னாலாட்டி

வீரப்பா அடக்கவுமே நன்றாயாட்டி

     வில்லைபோல பிடித்தனைக் காயப்போடே  - - 299

 

                                காரீயக் கட்டு

 போட்டதொரு வட்டதற்குக் கவசம் செய்து

     புதுமையுடன் புடம்போடச் சுன்னமாகும்

தேட்டான சுன்னமது பதனம் பண்ணி

   சிவப்பான கெவுரிதனக் கங்கி பூ ட்டி

மாட்டடா மண்சீலை யேழுஞ் செய்து

    மண்மறைவில் புடம்போட்டு வாங்கிக் கொண்டு

காட்டடா காரீயத்துள்ளே மைந்தா

       கருவான காரீயங் கட்டுந் தானே - - 300

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி