பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


சுத்தி முறைகள் - Edit 1

மூலிகை, கடை சரக்கு, பாடாணங்களின் சுத்தி முறைகள்

            உன்னத சித்தர்கள், பக்குவம் இல்லாதவர்களின் கையில் இந்த வாத.வைத்தியத் தொழில் சிக்கக் கூடாது என பரிபாசை எனச் சொல்லப்படுகிற மறைமொழிகளில் சொல்லி வைத்தனர். மேலும் அதன் சுத்தி எனப்படுகிற தூய்மைப்படுத்தும் முறைகளையும் மறைத்தனர், வெங்காயத்துக்கு சுத்தி என்பது  அதன் தோலை எடுப்பதுவே. தலைமுறை தலைமுறையாக நாம் வெங்காயத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் தோலுடன் உண்டால் வயிற்று கோளாறு உண்டாகும் . அதுபோல மருந்துச் சரக்குகள் , தனிமங்கள் , உலோக ரச உபரசங்களைச் சுத்தி செய்து அதன் தீக்குணங்களை அகற்றும் முறைகளைச் சொல்ல முயல்வோம்.


ஒன்னான சரக்கு சுத்தி ஒருவரும் உரைக்கவில்லை
கண்ணான சரக்குக் கெல்லாங் கன்மமுந் தீராவிட்டால்
பண்ணான மருந்திற் சேர்த்து  பருகிடப் பிணியாளர்க்கு
கண்ணான செந்தூரங் களுட்படும் நண்ணாகாதே


பாடுகின்ற சித்தர்தம் நூல்கலெல்லாம்
   பரிபாடை தெரியாத பாவியோர்க்குத்
          தேடுகின்ற பொருளழியச் சொன்னதல்லாற்
                     றினையளவு பொன்காணச் சொல்லவில்லை
வீடிழந்து மாடிலந் துள்ள செம்பொன்
                            வேணதெல்லாந் தானிழந்து மெய்தோன்றாமல்
                    காடுறைந்து போவதற்கோ பெரியார் சொல்வார்
                                காணாமற் புதைத்த சொல்லலைக் கண்டுதேறே.


தங்கம்

  


       தங்கத்தினை தகடாய் அடித்து அதற்கு செம்மண்ணை அரைத்து தகட்டுக்குப் பூசி கவசஞ் செய்து கொல்லன் உலையில் வைத்து ஊதி பழுக்கக் காய்ச்சி கழுவ தங்கத்தின் மாசுகள் நீங்கி சுத்தியாகும்.








அக்கராகாரம்

   1.  ஒன்றிரண்டாய்த் தட்டி சிறுக வறுத்தெடுக்கவும்.

    

    2. மேல்தோலைச் சீவிப் போக்கி எடுத்துக்கொள்ள சுத்தியாகும்


அதிமதுரம்  

     நன்றாகத் தண்ணீரில் கழுவித் துடைத்து, மேல்த் தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில்  உலர்த்த சுத்தி.


அமுக்குறாக் கிழங்கு

1, அமுக்கிறாக் கிழங்கை இடித்துச் சூரணம் செய்து , ஒரு பானையில் பசுவின் பால் விட்டு , பானையின் வாயைத் துணியால் வேடுகட்டி , துணியின் மேல்  இடித்த சூரணத்தை வைத்து சிறுதீயாய் எரித்து , பால் சுண்டும் வரை எரித்தெடுத்து , காயவைத்து எடுத்துக் கொள்ள சுத்தியாகும்.



ஆனைத்திப்பிலி 

1.     ஆனைத்திப்பிலியை காடியிலாவது அல்லது செம்மறியாட்டு மூத்திரத்திலாவது ஒரு சாமம் அதாவது மூன்று மணி நேரம் நனைய வைத்து  வெயிலில் உலர்த்தி எடுக்க சுத்தியாகும்.



இலிங்கம்

             A) தாய்ப்பாலில் இருபத்துநான்கு மணிநேரம் ஊறவைத்து எடுதுக் கழுவித் துடைத்து மறுபடி தாய்ப்பாலில் 24 மணி நேரம் ஊறவைக்க வேண்டும் இது போலவே மறுமுறையும் செய்து கழுவி எடுத்துத் துடைக்க சுத்தியாகும்

     

Lingam
லிங்கம்
        B)          ஒரு பானையில் பாதியளவ கற்சுண்ணத்தைப் போட்டு அதன்மேல் சுத்தி செய்ய வேண்டிய லிங்கத்தை பெருங்கட்டிகளாக வைத்து அதன் மேல் கற்சுண்ணாமபைப் போடடு முடியிட்டு  சீலை செய்து அடுப்பில் வைத்து ஒரு சாமம் அதாவது 3 மணிநேரம்  சிறுதீயாக எரித்து எடுத்து சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும், கைவல்யமான முறை,

        C)    ஒரு மண் மடக்கை ( தட்டு) அடுப்பி லேற்று முன் கோதுமை மாவால் (சப்பாத்தி மாவு பதம்) லிங்கத்தின் அளவைவிட பெரியதாக வட்டமிட்டு அதனுள் லிங்கக்கட்டியை லைத்து சிறுதீயாக எரித்து சற்று சூட‘டேறியதும் நாட்டுக் கோழிமுட்டை வெண் கருவால் சுருக்குக் குடுக்க வேண்டும் இப்படியே ஒரு மணிநேரம் குடுக்க லிஙக்ம் சுத்தியாகும்,


சுருக்கு குடுப்பது என்பது ஒரு பொருளை சூடு செய்து அதன்மேல் குறிப்பிட்ட திரவத்தை சொட்டுச் சொட்டாக விடுவதேயாகும். 

        D)  

நண்ணானகச் சரக்குசுத்தி நவிலுவோம் லிங்கத்துக்குப்

பண்ணான பழச்சாறோடே பருகிய பாலுங்கூட்டி

சண்ணாக மேனிச்சாறு    முன்றையுஞ் சமனாய் சேர்த்து

சுண்ணாக லிங்கத்திற்குச் சுருக்கிடச் சுத்தியாமே


        ஊமத்தன் விதை

    1. எழுமிச்சம்பழச் சாற்றை ஒரு பானையில் ஊற்றி , அதில் சுத்தி செய்ய வேண்டிய ஊமத்தன் விதைகளை துணியில் தளரத்  கட்டி சாற்றினுள் பானையின் அடி படாதவாறு தொங்கவிட்டு சிறு தீயாக 3 மணிநேரம் ( ஒரு சாமம்) எரித்து வெயிலில் உலர வைத்து எடுத்துக் கொள்ளவும்.


2.     ஊமத்தன் விதையை மூன்று மணி நேரம்  தண்ணீரில் ஊறப் போடச் சுத்தியாகும்.


எட்டிவிதை

      1. எட்டி விதையை ஒரு துணியில் தளர்வாகக் கட்டி அதனை ஒரு பானையில் தொங்க விட்டு,  எட்டி விதைக் கீழிக்கு மேல் நான்கு விரற்கடை,  சிறு கீரையை ( சிறுரை வேர்ச்சாறு என்பது பாட பேதம் )  இடித்துப் பிழிந்த சாற்றை விட்டு,  சிறு தீயாக எரித்து மூன்று மணி நேரமான பின் இறக்கி,  விதையின் மேல்த்தோலைச் சீவிக்கழிக்க சுத்தியாகும்.

      2. வாயகன்ற பானை அல்லது காரைச்சட்டியில் மணல் பரப்பி அதன் மேல் எட்டிக் கொட்டைகளைப் பரப்பி பின் அதன் மேல் மீண்டும் மண் பரப்பி தண்ணீர் தெளித்து,  மூன்றுநாள் ஆன பின் எடுத்து தோலைச் சிவிக் கழிக்கவும். எட்டிப் பருப்பைப் பிளந்து முளையினைக் கழிக்க சுத்தியாகும்.

கவனமாக உபயோகிக்க வேண்டிய பொருள் பித்த உபரி உடலைப் பாதிக்கக் கூடும்.

3.ஒரு பானையில் கரு ஊமத்தைச் சாற்றை விட்டு,  அதன் வாய்க்கு துணியால் குழிவாக  வேடு கட்டி ,  துணியின் மேல் எட்டி விதையை வைத்து அப்பானையின் மேல் வாய் பொருந்திய மற்றொரு பானை கவிழ்த்து சிறு தீயாய் எரித்து எடுத்து , எட்டி விதையின் தோலைச் சீவிக் கழிக்கவும்.

4. எட்டிக் கொட்டையைப் பிளந்து மூன்று நாட்கள் காடியில் ஊறவிட்டுப்  பின்னர் கோணியில் ( சணல் சாக்கு) தேய்த்து எடுக்க வெயிலில் உலரவிட்டெடுக்கச் சுத்தியாகும்

5. எட்டிக் கொட்டையைக் குப்பைக் கீரைச்சாற்றில் மூன்று மணி நேரம் வேகவைத்து உலர்த்த சுத்தியாகும்

6. எட்டி விதையைத் தேற்றான் வேர் மற்றும் சாற்றில் 48 நிமிடம் ( இரண்டு நாழிகை) எரிக்கச் சுத்தியாகும்.

7, எட்டிக் கொட்டையை நெல்லில் அவித்து சிறுகீரைச் சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவிட்டுத் தேற்றான் கொட்டைச் சாற்றில் வேகவிட்டு எடுத்துக்கொள்ளச் சுத்தியாகும்,

ஓமம்

       சுண்ணாம்புத் தெளிவு நீரில் மூன்று மணி நேரம் ஊற வைத்து எடுத்து வெயிலில் உலர்த்த சுத்தியாகும்.

கடுக்காய்

     1.  குமரி என்றழைக்கப்படும் சோற்றுக்கற்றாழை  மடலைக் கீறி, அதனுள் கடுக்காய்த்தூளைப் போட்டு சாய்வாக வைக்க அதிலிருந்து நீர் இறங்கும், இதை குமரி நீர் என்பர். இந்த குமரி நீரில் கடுக்காயை மூன்று நாள் ஊற வைத்து எடுத்து காய வைத்துக்கொள்ள சுத்தியாகும்.

2.     எவ்வித சுத்தி செய்தாலும் இதன் கொட்டையை/ விதையை நீக்கி விட்டு சதைப்பாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்,

3.  மஷ்த்தகி என்னும் கடுக்காயை எலுமிச்சம்பழச் சாற்றிலே நனைத்து வெயிலிலே உலர்த்தச் சுத்தியாகும் அல்லது நாய் மூத்திரத்திலே நனைத்து எடுக்க சுத்தியாகும்.




கரியபோளம் என்னும் மூசாம்பரம்

     1. வெள்ளாட்டின் சிறுநீரில் மூசாம்பரத்தைக் கரைத்து வடிகட்டி பானையிலிட்டு அடுப்பேற்றி சிறுதீயாய் எரித்து  சுண்டக் காய்ச்சி எடுக்க சுத்தியாகும்.

    2. காடியில் வேகவைக்க கரியபோளம் வெள்ளைப் போளம் சுத்தியாகும்,

    3.  கறுத்த போளம் , வெளுத்த போளம் இவற்றைக் காடி வார்த்து மூன்று மணி நேரம் அரைத்து வெயிலிலே வைக்கச் சுத்தியாகும். 


கலைமான் கொம்பு

      பாக்குச் சீவலை செதுக்குவது போல மான் கொம்பினை சீவி, அதை குப்பைமேனிச் சாற்றில் போட்டு நாள் முழுதும் ஊறவிட்டு, மறுநாள் சாற்றை மட்டும் இருத்து/ வடித்துவிட்டு, வேறு புதிய குப்பைமேனிச் சாறு விட்டு ஊற வைக்க வேண்டும். இவ்வாறே மூன்று நாட்கள் ஊறவிட கலைக்கொம்பு சுத்தியாகும்.
வெட்டிய பாக்கு

    மேற்கண்ட பாக்கு சீவல் போல் கலைக்கோடினை சீவிக் கொள்ள வேண்டும்.

         

    2. பாக்குச் சீவலை செதுக்குவது போல மான் கொம்பினை சீவி, அதை கோவை இலை போட்டு நாள் முழுதும் ஊறவிட்டு, மறுநாள் சாற்றை மட்டும் இருத்து/ வடித்துவிட்டு, வேறு புதிய குப்பைமேனிச் சாறு விட்டு ஊற வைக்க வேண்டும். இவ்வாறே மூன்று நாட்கள் ஊறவிட கலைக்கொம்பு சுத்தியாகும்.

கழற்சிக்காய்

     1. கழற்சிக்காயின் தோல் நீக்கி, அதன் உள்ளிருக்கும் பருப்பை எடுத்து சுடு தண்ணீரில் கழுவி எடுத்து, முளை நீக்க சுத்தியாகும்.


கிராம்பு

      மொட்டுபோல் உள்ள பூவைக் கழிக்க சுத்தியாகும்.

குக்கில் என்னும் குங்கிலியம்

       1. குங்கிலியத்தை ஒருநாள் வரை மோரில் ஊறப் போட்டு எடுக்க சுத்தி

       2. குக்கிலை உருக்கி,  ஒரு பானையில் நிறைய இளநீரை விட்டு  உருக்கிய குக்கிலை சிறிது சிறிதாய் ஊற்றி எடுக்க சுத்தியாகும். அதிக சுத்திக்கு இந்தப்படியே இரண்டு மூன்று முறை செய்யலாம்.

        3. எலுமிச்சம்பழச் சாற்றில் ஊறவைத்து உலர்த்தினால் சுத்தியாகும்


        4. கடுக்காய், நெல்விக்காய், தான்றிக்காய் இவற்றின் குடிநீரில் (கசாயம்), குங்கிலியத்தை மூட்டை கட்டி  ஊறப் போடச் சுத்தியாகும். இதே குடிநீரில் , கீழி கட்டி  ,  தோலா எந்திரமாக எரித்தெடுக்க சுத்தியாகும் என்பது வேறு முறை,


        5. பேய்ப்புடல், வேப்பம்பட்டை, ஆடாதோடை இவற்றைச் சரி அளவு கூட்டி நீர் விட்டு கொதிக்க வைத்து வடித்து  அதில் குக்கில் பொடியைக் கலந்து வைக்கச் சுத்தியாகும்.


        6.  வேப்பம்பட்டையை இடித்துக் குடிநீராக்கி அதில் குங்கிலியத்தைத் தோலாயந்திரமாக கீழி கட்டி காய்ச்சிப் பிழிந்து எடுத்துக் கொள்வும் பின்னர் பூவரசம்பட்டை அல்லது பூவரசம் பூவில் கசாயம் வைத்து அதில் காய்ச்சிக் கொள்ள சுத்தியாகும்.


        7.  திரிபலை. தேவதாரம். பேய்ப்புடல் இவற்றை இடித்துக் கசாயம் செய்து அதில் குக்கிலைக் கீழி கட்டி இட்டு பனிரெண்டு மணி நேரம் எரிக்கவும், பின்பு பேய்ப்புடல், பத்திரி , வேம்பின் பட்டை இவற்றைக் கசாயம் செய்து அதிலிட்டுக் காய்ச்சிக் கொள்ள சுத்தியாகும்.

        8. வேப்பம்பட்டை, கண்டங்கத்திரிவேர் , பேய்ப்புடல், ஆடாதோடை இலை இவை இவை வகைக்கு 35கி கூட்டித் துவைத்து 2லி தண்ணீரில் போட்டு எட்டிலொன்றாகச் சுருக்கிக் கொள்ள வேண்டும், பானையில் வேடுகட்டி குங்கிலியம் மேலே வைத்து மூடி எரியவிட்டு மெழுகு பதமாக இறக்கவும், அந்தத் தண்ணீரில் குஙகிலியத்தைக் கழுவ சுத்தியாகும்.


கொத்தமல்லி விதை

       இளஞ் சூட்டில் நன்றாக வறுத்துத் தேய்த்து புடைத்தெடுக்கவும்.


சாதிக்காய்

         சாதிக்காயின் மேல்த் தோலினை சீவி, ஒரு சட்டியில் நெய் விட்டு சிறு தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.


சிவதை வேர்

        1. வேர், கிழங்குகளின் பொது விதியான தோலைச் சீவிக்கழித்து, நடு நரம்புகளை நீக்கி, சிறுதுண்டுகளாக்கி,  புட்டவியல் முறையில் பாலில் அவித்து எடுத்துக்கொள்ள சுத்தி.


சீரகம்

      1.  வேறு பொருட்கள், தூசு தும்பு இல்லாமல் ஆய்ந்து, வாசனை கிளம்பும்படியாக வறுத்து எடுக்க சுத்தியாகும்.


        2. சீரகம் கருஞ்சீரகம்  இவற்றைச் சுண்ணாம்புத் தெளிவு நீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து உலர்த்தி எடுக்க சுத்தியாகும்.


சுக்கு

    1.  நல்ல சதைப்பற்றான. தரமான சுக்கின் மேற்றோல் நீக்கி, சுண்ணாம்புத் தெளிநீரில் ( சுக்கு என்னும் post பார்க்கவும்) ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுத்து வெயிலில் காய வைக்கவும்.

        2.  சுக்கை நொச்சிச் சாற்றில் ஒன்பது முறை நனைத்து எடுக்கச் சுத்தியாகும்.


        3.  சுக்கைத் தோல்போக்கி சுண்ணாம்பு பூசி மூன்றுமணி  நேரம் வெயிலில்  உலர்த்திக் கழுவி எடுக்கச் சுத்தியாகும். 


        4. மாச்சுக்காகத் தேர்ந்தெடுத்து கற்சுண்ணத்தில் சேர்த்துத் தாளித்துக் கழுவி எடுத்து மேற்றோலைச் சீவி நீக்கிக் கொள்ள வேண்டும்,


திப்பிலி

         1. சித்தர் மூலம் என்னும் கொடிவேலி வேரினை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து எட்டொன்றாய்க் குறுக்கி, அதை வடித்த கியாழத்தில் திப்பிலியை ஊற வைத்து எடுத்து உலர்த்த சுத்தியாகும்.

        2.  திப்பிலியை எலுமிச்சம்பழச் சாற்றில் ஊறவைத்து எடுக்க  சுத்தியாகும்.

        3. திப்பிலியை செம்மறியாட்டுக் கோமியத்திலாவது , காடியிவாவது  மூன்று மணி நேரம் ஊறவைக்க சுத்தியாகும்.


தேத்தான் கொட்டை /தேற்றான்விதை 

     1.  ஒருநாள்  தண்ணீரில் ஊறவைத்து, பிறகு வேக வைத்து, கொட்டையின் மேல்தோலை  ஓட்டு வில்லையின் மேல் தேய்த்த பின் அதை சுத்தமான நீரில் கழுவித் துடைத்து எடுத்துக்கொள்ள சுத்தி.

        2. தேத்தாங்கொட்டையைப் பசுவின் பாலில் ஊறவைத்து நீரில் கழுவி உலரவிட்டு எடுக்க சுத்தியாகும்.


தேன்

      திறமான தேனை சட்டியிலிட்டு சூடு செய்து, நுரை நீக்கி வடிகட்டி எடுக்க மாசு புழுக்கள் நீங்கி ஒருவாறு சுத்தியாகும்.

நெல்லி வற்றல்/ நெல்லிமுள்ளி

      1. நெல்லி வற்றலை பசும்பாலில் வேக வைத்து கொட்டை நீக்கி உலர்த்த சுத்தியாகும்.


புகையிலை  

        புகையிலையை,  அகத்திக்கீரையின் நடுவே வைத்து நீர் விட்டு சிறிது நேரம் எரித்து எடுக்க சுத்தியாகும்.

பூரம் (எ)  ரசகற்பூரம்

     A)  கல்சுண்ணாம்பை ஒரு பானையின் பாதியளவு போட்டு அதன்மேல் பூரத்தைக் கட்டியாக வைத்து பானையில் மீதமுள்ள கற்சுண்ணத்தைப் போட்டு அழுத்தி, பானையின் வாயை மண்தட்டு கொண்டு   முடி , அடுப்பேற்றி சிறுதீயாக ஒரு சாமம் எரிக்க ரசகற்பூரம் சுத்தியாகும்

       B)   வெற்றிலை, பாக்கு சேர்த்து இடித்து அதைக் கியாழம் எனப்படும் கசாயம் என்னும் குடிநர் செய்து , அந்தக் குடிநீரில் ரசகற்பூரத்தை ஊறவைக்க வேண்டும், இவ்வாறாக 3 நாள் ஊறவைத்துப் பின், ஊறவைக்கப்பட்ட பூரத்தை ஒரு துணியில் கட்டி, அதே குடிநீரில் தோளாயெந்திரமாக, அதாவது துணியில் கட்டப்பட்ட( கீழி) பூரத்தை அதே குடிநீரின் மட்டத்துக்கு மேலே இருக்குமாறு மேல்முடியில் துளையிடடு கயிறு கட்டி தொங்க விட வேண்டும . பின் சிறு தீயாக எரித்து  அவித்து எடுக்க சுத்தியாகும்,


     

ரசகற்பூரம்
பூரம்


பூலாக்கிழங்கு  

       மேல்த்தோல் சீவி வெயிலில் காயவைத்து ஏடுக்கவும்.


பெருங்காயம் 

       1. பெருங்காயத்தைப் பொடித்து,  சட்டியை அடுப்பிலேற்றி சிறிதளவு நெய்விட்டு சிறுதீயில்  பெருங்காயத்தைப் போட்டு பொரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

        2. பெருங்காயத்தை  வெற்றிலைச் சாற்றில் மூன்று மணி நேரம் ஊறவைத்து உலர்த்த சுத்தியாகும்.

        3. பெருங்காயத்தை தாமரையிலைத் தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊறவைத்து  வெயிலில் உலர்த்த சுத்தியாகும்.

        தாமரையிலைச் சாற்றிலே மூன்று மணிநேரம் அரைத்து வெயிலிலே வைக்கச் சுத்தியாகும்.

        4. பெருங்காயத்தை தாமரைக்கிழஙகு சாற்றில் அரைத்து வெயிலில் வைக்க சுத்தியாகும்.

        5. பெருங்காயத்தை விளக்கெண்ணையில் வேக வைக்க சுத்தியாகும்.

        6. பெருங்காயத்தை ஆட்டுப்பாலில் வேகவைக்க சுத்தியாகும்.

மாசிக்காய்   

      1.  பசுவின் நெய்யை சூடாக்கி மாசக்காயைப் போட்டு அது பொரிந்து,  வெடிக்கும் பக்குவத்தில் எடுக்க சுத்தியாகும்.

       2. மாசிக்காயை கொட்டை நீக்கி ,  தேன் வார்த்து அரைத்து உருட்டி வளைத்துச்சுற்றி இரட்டைப் புடவையில் கட்டி கொள்ளுச்சாறு , கோமூத்திரம், காடி  இவைகளிலே தோலாயந்திரமாக நாற்பத்தெட்டு மணிநேரம் எரிக்கச்சுத்தியாகும். 


மிளகு

      1. பழைய சோற்று நீரில் ஒரு நாள் ஊற வைக்கவும்

      2. சட்டியிலிட்டு சிறு தீயாக எரித்து, வறுத்து,  வாசனை வந்தவுடன் இறக்கி ஆற விடவும்.

       3.  மிளகை கரிசலாங்காணிச் சாற்றில் ஏழு முறை நனைத்து எடுக்கச் சுத்தியாகும்.

        4. மிளகை. நெல்லிக்காய்ச் சாற்றில் ஊற வைக்கச் சுத்தியாகும்.

        5. மிளகைக் காடியில் ஊறப்போட்டு வெயிலில் வைக்கச் சுத்தியாகும்.

        6. மிளகைப் புளித்த மோரில் ஒன்றே கால் மணி நேரம் ஊறப்போட்டு உலர்த்தி வறுக்கச் சுத்தியாகும்.

        7. மிளகை எலுமிச்சம்பழச் சாற்றில் அரைத்து வெயிலில் வைக்க சுத்தியாகும். 


முத்து

      ஊமத்தை இலையை இடித்தெடுத்த சாற்றில் துளையிடப் படாத நன்முத்தினை ஒருநாள் முழுவதும் ஊறப் போட்டு, மறுநாள் புளிய மரத்து இலையை இடித்து வடித்த சாற்றில் ஒரு பொழுது ஊற வைத்து எடுத்து, சுத்தமான தண்ணீரில் கழுவி எடுக்க சுத்தியாகும்.


வீரம்

மருத்துவர் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு மட்டுமே, பொது மக்களுக்கு இல்லை. 

    A)     தென்னை மரத்தின் குரும்பைகளை இடித்து சாறு எடுத்து வடித்து அதனை ஒரு மட்கலத்தில் ஊற்றி வீரத்தை ஒரு துணியில் கட்டி அதை அந்த மட்கலத்துக்குள் செலுத்தி மட்கலத்தை தொடாதவாறு தொங்கவிட (தோளா எந்திரம்)  வேண்டும், பின் சிறுதீயாக எரிக்க வீரம் சுத்தியாகும், இதன் புகை நஞ்சாகையால் புகை கண்ணிலும், மூக்கிலும் படாதவாறு மிகமிக கவனமாகச் செய்ய வேண்டும். பாதுகாப்பு வழி முறைகளையும் , பாதுகாப்பு உபகரணங்களையும் பயன்படுத்த வேண்டும்.

Veeram
வீரம்



  வீர முறிவு


            வீர நஞ்சாகிவிட்டால் உடனடியாக இதைக் குடுக்க வேண்டும்


 
         சாறு எடுத்துக் குடுக்க வேண்டியவை  -  தேங்காய்ப்பபால்., பழரசம், தென்னங்கள், நீலி, நெருஞ்சிச்சாறு, கறுபசளை,

கியாழம் அதாவது கசாயம் செய்து குடுக்க வேண்டியவை  - மிளகு, பேய்ப் பீர்க்கு.

அப்படியே குடுக்க வேண்டியவை - நல்லெண்ணெய், கம்மாறு வெற்றிலை, எருமை வெண்ணை, முட்டை வெள்ளைக் கரு, 

அனைத்து  மருந்துகளையும் மணிக்கொரு தரம் குடுக்க வேண்டும்,
                                                                  

வெள்ளை வெங்காயம் 

    வெள்ளை வெங்காயம் முளை வாங்கச் சுத்தியாகும் 


அ,க,சூ  -  ளருய / 1887

சரக்கு சுத்தி செய்முறைகள், சித்த மருத்துவ நுல் வெளியீட்டுப் பிரிவு , இந்திய மருத்துவத் துறை , ஓமயோபதித் துறை

    இணையம்





















No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி