பக்கங்கள்

0

Recent posts

கல்லுப்பு ஆய்வு

                                     உப்புக்கட்டு                       "போகர் கருக்கடை நிகண்டு 500 " "சித்தியாம் வுப்பெடுத்த...


அகத்தியர் - அமுதக் கலைஞானம் / பாடல்கள் 1- 100.

 




அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 101 -  200

அமுதக் கலை ஞானம் 1200 - வரு. 1887

காப்பு 

ஆதி பராபரத்தினுட கிருபை கூர்ந்து

    அப்பனே மனோன்மணியைத்  தொழுது போற்றி

சோதியெனுங் கமல மலரமுதங் கொண்டு

    சுந்தரம் போல் வாதத்திலட்சங் காப்பு

நீதிபெற வயித்தியத்தி லிரண்டு லக்ஷம்

    நிலைத்ததொரு சூத்திரத்திற் கோடா கோடி

வாதியென வந்தோர்க்கும் பெரியோர்க்கும்

    மனமகிழ்ந்து கருக்குவாய் வசனித்தேனே    1

                             நூல்வகை

வசனித்தேன் காவியத் திருநூறுக்குள்

    வண்மையுள்ள சகலகலைக் ஞானமெல்லாம்

நிசனித்தே னாயிரத்திருநூறுக்குள்

    நிச்சயமாய்க் கருக்களெல்லா மிதிலே சொன்னேன்

திசனித்த மந்திரங்கள் சக்கிரங்கள்

    தீட்சையொடு சரக்கு வைப்பு செந்தூரங்கள்

பசனித்த பற்பவகை மெழுகு ஜெயநீர்

    பாங்கான தாமிரமும் சிமிட்டுப் போக்கே        2

 

போக்கான யந்திரமா மயேந்தர சாலம்

    புதுமையுள்ள அஞ்சனமும் வசியப் போக்கும்

நீக்கான மறைப்போடு திலதப் போக்கும்

    நேரான மோடியிலே யனந்தப் போக்கும்

வாக்கான பலிதமுள்ள கருவின் போக்கும்

    வஞ்சனைகள் பில்லியுட மார்க்கப் போக்கும்

தாக்கான சரிதையோடு கிரியைப் போக்குந்

    தண்மையுள்ள யோகமுடன் ஞானமாமே  3

 

ஞானமுடன் தேகசித்தி கற்பக் கூறு

    நலமான தீட்சை முதல் தியானப் போக்கும்

ஊனான காயாதி கற்பப் போக்கும்

    உண்மையுள்ள முப்பூவின் கருவின் போக்கும்

தேனான மதியமுதஞ் சமாதி கற்பஞ்

    சிந்தை மனதொன்றான அஷ்ட பந்தங்

கோனான குருவினுடை கருணை பெற்றுக்

    கூறினேன் பன்னிரண்டு நூறுந்தானே        4

 

தானென்ற பன்னிரண்டு நூறுக் குள்ளே

    சகலகலைக் ஞானமெல்லா மடக்கிப் பாடித்

தேனென்ற மொழிபோலே யிந்த நூலைச் 

    சிக்கெனவே சமாதிதனில் வைத்தேனப்பா

நானென்ற ஆணவத்தால் சித்தர் கூடி

    நலமாக வந்தார்க ளொடுக்கந் தன்னில்

கோனென்ற என்குருவே பூரணமே ஐயா

    கும்பமுனி சரணெமென்று கூறினாரே.            5

 

        சித்தர் அகஸ்தியரைக்கண்டு வசனித்தல்

கூறின சொல்லேதனவே யென்று நானுங்

    குணமாக வந்தோர்க்கு ஆசனங்கள் போட்டு

மீறினது ஏதனவே கேட்டேனப்போ

    விளம்பினது ஆயிரத்திரு நூறுக்குள்

தேறினது செகத்தோர்கள் கண்டாரானால்

    சிவசிவா கைலாசமிடங் கொள்ளாது

கோரினது என்னவை யாவென்று கேட்டார்    

    குணமான சித்தருக் காமென்று சொன்னேன்            6

 

சொன்னவுடனடி பணிந்து சித்தரெல்லாந்

    துன்மார்கக் கருலகத்தோர் கண்டாரானால்

என்னவையா வுலகமெல்லாஞ் சித்தாய்ப் போகு

    மிதற்கு நீசாபமது ஈவாய் யீவாய்

உண்மையுள்ள இந்தநூல் சித்தர்க்கேயாம்

    உலகிலுள்ளோர்க் கிந்நூலைச் சித்தரீந்தால்

நன்மை பெறவுதறினால் செந்தீ பற்றி

    நடுக்கமுடனவன் சிரசு தெறித்துப் போமே            7

 

போமென்று சொன்னவுடன் சித்தரெல்லாந்

    புகழான இந்நூலைப் பதனம் பண்ணி

நாமென்ற ஆணவத்தை ஒடுக்கிக் கொண்டு

    நலமான இந்நூலைக் குகைக்குள் வைத்து

தேனென்ற அமுதம் போலெடுத்துப் பார்த்து

    சிவசிவா மறுபடியுங் குகைக்குள் வைத்து

கோனென்ற குரு போலிந்த நூலை

    குரு நூலூபோல வரவர்கள் பணிந்திட்டாரே            8


 

நூல் பதனமாக்கும்படி புலத்தியருக்குரைத்தல்


பணிந்திட்ட இந்நூலைப் புலத்தியா கேள்

        பார்தனிலே யொருவருக்கும் பகர வேண்டாம்

கனிந்திட்ட பூஷணம் போலிந்நூல் மைந்தா

        கருவான பொருளெனவே கருத்தில் வைத்து

துணிந்திட்ட மனம்போலே குருவைக் காரு

       சொல்லாத பூரணத்தில் சொக்கி யேறு

அணிந்திட்ட வாசியினாலறிவைப் பற்றி

      அரகரா பூரணத்திலருள்தான் பாரே.            9

 

அருளான குருபதத்தை யழுத்திப் பாரு 

      அழுத்தி முனை பார்க்கையிலேயருள்தான் காணும்

இருளான மாய்கை தனையறுத்து நீயு

      மின்பமுள்ள பூரணத்தை யியல்பாய்க் கொண்டு

மருளான புத்திதனை யறுத்துத் தள்ளு

       மதியான சந்திரனைக் கருத்திற் சேரு

உருவான பூரணத்திலுரிமை வைத்து

       உண்மையுடன் பூரணத்திலுன்னிப் பாரே     10

 

              பூரணமகிமை 

 

உன்னுவது எவ்விடமென்றுகந்து கேளு

      வுண்மையுடன் சொல்லுகிறேனுனக்காய்  மைந்தா

நண்ணுவது அகாரமடா ஐயாஐயா 

        நலமான அகாரமொடு உகாரம் ரண்டும் 

சொன்ன பொருளிவைமொன்றாய்க் கூடும்போது

        துருவமுள்ள ஓங்காரம் நீதானாச்சு

இன்னமொன்று சொல்லுகிறேன் புலத்தியாகேள்

         இரவிமதி யற்ற விடம் நீதானாச்சே          -11

 

நீயென்ற சொல்லது தானாரென்றாக்கால்      

      நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் புலத்தியா கேள்

கோனென்ற குருவாகுந் திருவுமாகுந்

         குருவிருக்கு மாயிரத்தெட்டிதழுமாகுந்

தேனாகு மமிர்தரசப்பூரணமே யாகுஞ்

         சிதம்பரத்தின் சூக்ஷதி சூக்ஷமாகு

மூனென்ற நாதமுடன் விந்துவாகு

        முண்மையென்ற பொருளாகும் ஊமையாமே 

                                                                      - 12

 

                  மவுனமகிமையுரைத்தல்

 

ஊமையென்ற பொருளே ஐயாஐயா

       உண்மையுட னெந்தனக்கு உரைக்க வேணும்

ஆமையென்ற அகாரமடா உகாரம் ரண்டும்

         அருள் பெருகி கூடினது மவுனமாகும்

சீமையெங்குந் திரிந்ததனால் மவுனமாமோ

         சிவாயகுரு தேசிகனை கண்டாற் காணுந்

தூமையென்ற சொல்லதினால் ரோஷம் பெற்ற

        துரோகியிடஞ் சொல்லாதே நூலைப் பாரே      --13

 

 

 

நூல்பார்த்தால் பூரணநூல் தன்னைப்பாரு

         நுண்மையுள்ள தீட்சை யதினுணுக்கம் பாரு

கால்பார்த்து ஏறுதற்குக் கருவைப் பாரு

         கருத்துவைத்து இந்நூலைக் கருவாய்ப் பாரு

சேல்பார்த்துக் கொள்வதற்கு ஆயிரத்தைப் பாரு

        சிவசிவா எந்தனுட யட்சணியைப் பாரு

நாள்பார்த்துக் கொள்வதற்கு ஜோசியத்தைப்பாரு

       நன்மைபெற வேண்டுமென்றால் குருவைக்காரே

                                                                     ---- 14

 

                 

குருவான பதியறிந்து குருவைக் காரு

      குருவறிந்து பூரணத்தைக் குணமாய்க் கொள்ளு

திருவிருந்து பூரணத்தைத்தினமுங் கொண்டால்

       சிவசிவா   கயிலாச தேகமாகு

மருவிருந்த ஆயிரத்தெண் மலருக்குள்ளே

       மகத்தான அமுதமது கசிந்து காணுங்

கருவான அமுதமதைக் கொண்டால் மைந்தா

         காயசித்தி யோகமுடன் வாதமாமே      ---  15

 

           வாதத்திற்குக்கருவுரைத்தல் 

 

வாதமப்பா பிலப்பதற்குக் கருவைக் கேளு

         மகத்தான பூரணத்தை மருவிப் பாரு

சேதமப்பா வொருநாளுமில்லை யில்லை

         சிவசத்தி இரண்டையுமே தினமு நோக்கி

பேதமப்பா ஒருநாளும் நினைக்க வேண்டாம்

        பிலத்தபுத்தி அறிவினால் பேணிப் பாரு

நாதமப்பா நின்றநிலை தன்னைப் பாரு

       நயமாக இந்நூலைக் காருகாரே                ---16

 

இந்நூல் தானாயிரத்திருநூறுக்குள் இன்ப துன்ப

         மிரண்டையு நானெழுதி வைத்தேன்

சொன்னதொரு நூல்களுக்கு இந்நூல் தானுஞ்

        சுத்தமுள்ள குருநூலாய்த் தொழுது போற்று

நன்னயமா யிந்நூலை யார்க் கீந்தாலும்

         நான் சொன்ன சாபமது பலிக்குமப்பா

தன்மையுள்ள புலத்தியனே யோகவானே

        தகையினா லிந்நூலைப் பதனம் பண்ணே    --- 17

 

பண்ணப்பா அடிமூல மேலாதாரம்

      பாங்கான குண்டலியி லங்கென்றிட்டு

விண்ணப்பா மேல்மூல மாறாதாரம்

       மெய்யான மவுனத்தை மேவி யோட்டு

கண்ணப்பா சுழிமுனையில் கடுக வுண்ணு

        கற்பூரமதைக் கருத்தாற் சேவி

உண்ணப்பா அமுதமதை யுண்ணு வுண்ணு

       உன்தேகம் விளக்கொளி போல் சித்தியாமே --18

 

சித்தியப்பா அடிமூல மேலாதாரஞ்

       சென்றங்கே சதாசிவத்தின் தீட்சை கூடி

பத்தியுடன் ரேசக பூரகமும் பண்ணிப்

       பதியான கும்பகத்தில் நின்றாயானால்

எத்திசையிலுள்ள அதிசயங்களெல்லாம்

        ஏகாந்தமாக நீயறிந்து கொள்வாய்

புத்தியுள்ள புலத்தியனே சொல்லக்கேளு

            போதமென்ன பூரணமே சதயமாமே      --19

 

சத்தியமே தவிராமல் நிலைக்க வேணுந்

       தண்மையுண்டாய் தருமத்தில் சிரிப வேணும்

பத்தியுடன் பெரியோரைப் பணிய வேணும்

        பதறாமல் காயசித்தி பண்ண வேணும்

புத்தியுடன் பூரணத்தைக் காண வேணும்

        பூரணமே செல்வமென்று புகல வேணுஞ்

சித்தியுள்ள சிதம்பரமே அம்மயமாய்த் தோன்றுஞ்

    சிவசிவா என்னசொல்வேன் பூரணத்தின் செயலே -20

 

                      சிதம்பரச் சக்கரமகிமை

 

செயலான சிதம்பரத்தின் மகிமை கேளு

      சிறக்கவே ஆறுவரை நேரே கீறி

மயமான ஆறு வரை குறுக்கே கீறி

      மைந்தனே யிருபத்தஞ்சரையு மாச்சு

தயவானநமசிவய வென்று போட்டுத்

      தண்மையுடன் நடுவணைப் பிடித்து மாறு

சுயமான சிதம்பரத்தி னடனங் காணுஞ்

       சொல்லுவார் நடனசபை யென்று பாரே . 21

 

 

பாரப்பா சிவயநம வென்று போட்டு

     பாங்கான நடுவணைப் பிடித்து மாறு

நோப்பா நின்ற கயிலாசந் தன்னில்

      நிச்சயமாய் கனகசபை நேரே தோன்றுங்

காரப்பா அதில் மனதை வைத்துக் காரு

     கனகமது வுனக்கு நிகருண்டோ பிள்ளாய்

கூரப்பா நமசிவய வென்று போட்டு

      குணமாக நடுவணையைப் பிடித்து மாறே       --22

 

மாறப்பா யான் சொன்னபடியே பார்த்து

       மகத்தானபுலத்தியனே சொல்லக் கேளு

ஆரப்பா வுனகீடு தில்லை ராஜர்

       அன்புடனே யெதிராக நிற்பார் பாரு

காரப்பா அவர் பதத்தில் தொண்டு பண்ணி

      கனிவாகத் தியானித்தா லப்பா கேளு

கூரப்பா வுன்மனதில் நினைத்த தெல்லாம்

      கூர்மையுட னீந்திடுவார் குருவைப் போற்றே   --23

 

                     பஞ்சாட்சர மாற 

 

போற்றப்பா நமசிவய வென்று போட்டு 

       புகழாக நடுவணைப் பிடித்து மாறு

நாற்றமுள்ள சிதம்பரமே நீயே யாவாய்

        நன்மையுடன் மந்திரங்க ளெல்லாம் சித்தி

வாய்த்திரிவு இல்லையடா மனமே செம்மை

        வசிய முதலஷடசித்து மகிழந்து ஆடும்

பூத்தமலர் வாசனைப்போல் பிரகாசிக்கும்

         பூரணத்தைப் பிறவாதே புனிதமாமே       -- 24

 

புனிதமாய் வயநமசி யென்று போட்டு

         பூரணத்தில் பற்றி மனதறிவி னின்றால்

இனிதமுள்ள காயசித்தி யாகு மாகும்

          இன்பதுன்ப மிரண்டினுட இயல்பு காணும்

இனிதமுள்ள பீடையெல்லாம் விலகிப் போகும்

          அரனாரும் சிவனுமையு மன்பாலீவார்

மனிதனென்ற பேர்போச்சு மகாத்மா வாச்சு

         மாநிலத்தில் நீயுமொரு முனியாவாயே      - - 25

 

 

முனிவான அஞ்செழுத்தும் நமசிவய மாகும்

        முதன்மையுள்ள அஞ்செழுத்துக் குயிரைக் கேளு

தனிவான சிதம்பரமேஅல்லது ண்டோ

          தாலவனாய் நின்றதொரு பூரணமே யாகுங்

கனிவான பூரணத்தைக் கண்டால் முத்தி

        கற்பமெனக் கொண்டாக்கால் காயசித்தி

மணியான மனோன்மணியாம் நமசிவய வென்று

      மைந்தனே மாறினதால் சித்தியாமே       - 26

                   நாற்பத்துமுக்கோணம்

 

ஆமப்பா சிவத்தினுட கூறு சொன்னேன்

        அப்பனே சத்தியுட மார்கங் கேளு

நாமப்பா சொல்லுகிறோ முக்கோண வட்டம்

        நன்மையுட னாற்பத்து மூன்று மாச்சு

தாமப்பா நாலுபத்து மூன்றுக்கு ந்தான்

        சங்கையுடன் சிதம்பரம் நன்றாய் நாட்டி

காமப்பால் கானற்பாலி ரண்டுங் கொண்டு

       கருவேற வுருவேறக் கருத்தி லூணே        --- 27

 

 

ஊணப்பா சக்தியுட பூவை யாச்சு

        ஓகோகோ சிவத்தினுட பூவை யாச்சு

பூணப்பா சிவசத்தி யிரண்டுங் கண்டு

         புனிதமுடன் மனதறிவால் நின்று கொண்டு

காணப்பா காலைசிவ மாலைசத்திக்

         கருணையுட னிருவரையும் பூசித்தாக் கால்

நானப்பா சொல்லுகிறேன் சித்தி முத்தி

         நன்றான யோகமுதல் வாதமாமே  ----28

 

ஆமப்பா அகமறியார் சண்டி மாண்பர்

        அறுசுவையின் விவாமதை யறியா மூடர்

நாமப்பா வென்று அகம்புகுகா பாண்பர்

         நன்மையுள்ள பூரணத்தையறியா மாண்பர்

காமப்பால் கானற்பால் காணா மாண்பர்

        கன்மவினைதீராத கழுதை மாண்பர்

வாமப்பாலவகை யறியாமடையர் மெத்த

        வஞ்சருடன் சொல்லாதே மனத்தைப்பாரே ----29

 

 

 

              பூரணதரிசன மகிமை 

 

மனமான பூரணத்தையார்தான் காண்பார்

       மகத்தான குருசொல்ல அறிய வேணும்

இனமான வாசியைத்தானார்தான் காண்பார்

       இயல்பான யோகி சொல்ல அறிய வேணுங்

குணமான குணடலியைக் கண்டால் மைந்தா

        குருவான பதி தலத்திற் கூடலாகுங்

கனமான கண்டமதிலங்கென் றோட்டு

       கருத்துறவே குறியை மெள்ளக் கருதிப்பாரே --- 30

 

பாரக்கவென்ன தீபவொளி பளிச்சென்றே தான்

     பண்பாகக் காணுமப்போ கண் கூசும்

மார்க்கமுடன் கண் கடுத்துக் கூசிற்றானால்

     மருட்டி மெள்ள வுருட்டியே குறியிலேறு

ஏற்கையுட னிப்படியே பழக்கமானால்

       என்னசொல்வே னந்திப் பிரகாசமப்பா

சேர்க்கையுடன் அகாரம் உகாரம்

       தினந்தோறுஞ் செபித்தவனே சித்தனாமே --- 31

 

                       காலவளவுகூறல்

 

சித்தனா யிருப்பதற்கு அகார தீட்சை

      செபித்திடுவா யாண்டொன்றில் தவிராமற்றான்

முற்றுதலாய் தினந்தோறும் பழக்கமானால்

        மூலத்திற் கினிதான முயன்று காணும்

பற்றுதல் விடாதமடி நின்றாயானால்

        பாலகனே மூலவன்னி அகன்று போகும்

அற்றுதடா அசதியெல்லா மகன்று போகு

         மறுசுவையின் வீறெல்லா மகன்றுபோமே –32

 

போனபின்பு  உகாரத்தை மருவி யேறு

      புத்தியுட னாண்டொன்றி லதின்மேல் தானும்

ஆனபின்பு நீர்கடுத்து வெட்டை மீறு

        மாக்கைதனில் வாய்வு நின்று பித்தமீறும்

ஊன்சுவையில் மனம் வெறுத்து திகைத்துக் காட்டு

      முத்தமனே யிப்படி நீயிருக்கு தென்று

கோனருளைப் புலத்தியனே விட்டிடாதே

      கொண்டு மெள்ள ஏற்றிவிடு வினை நில்லாதே ---33

 

வினையானபீடையது பிலத்துதானால்

       வேணபடி கற்பமதை விரும்பியூட்டு

சுனையான சுனையெல்லா மோடிப்போகுஞ்

      சுந்தரம் போலுன்தேகந் துலங்கும் பாரு

முனையான சுழினை மேல் வாசி யேற்று

        மூவுலகுங் காணுதற்கு முனைமேல் நில்லு

துணையான சற்குருவைத் தொழுது போற்று

        தொழுகை விட்டுத் தொழுதாக்கால்  மனமேயாமே

                                                                        -34

பேய் பிடித்துச் சாத்திரத்தை யுலகத்தோர்கள்

      பேணியே படித்திடுவார் குருவைக் காணார்

வாய் புழுத்தநாய் போலே யுலகத்துள்ளே

        வணக்க நெறியறியாமல் மாண்டு போனார்

நோய்பிடித்த சித்தர்கள்தா னனந்தமுண்டு

         நோக்கியே யவர்களிடம் பேச வேண்டாம்

தாயறியாப் பிள்ளையிடஞ் சேரவேண்டாந்

        தண்மையுடன் பூரணத்தைப்போக்குவாயே --35

 

                       சடாட்சர மகிமை

 

தன்மையுடன் சடாக்ஷரத்தின் மகிமை கேளு

        தயவாக அறுகோணமிட்டு நன்றாய்

உண்மையுடன்  ஓம்நமசிவாய மென்று

        உறுதியுள்ள கோணமதில் உகந்துபோடு

நன்மையுடன் சரவணபவ வென்றேதான்

        நாட்டடா கோணமதின் சுற்றில் தானே

உண்மையுடன் வட்டமிட்டு சூலமிட்டு

        வுள் விந்து தானெழுதி யோகம் போடே ---- 36

 

போட்டவுடன் ரேசக பூரகமும் பண்ணி

         புனிதமுடன் கும்பகத்தில் நின்று கொண்டு

நாட்டமுடன் மனதுறைத்துச் செபித்தே யானால்

        நலமான முருகனுமே பிரகாசிப்பான்

தேட்டமுட னவர்பதமே பணிந்து போற்றி

        சிவாய குருதேசிகனே சிவமேஐயா

பூட்டுமுனை திறவுகோல் திறக்கவென்று

       புனிதமுடன் தாவெனவே தருவார் பாரே       -35

 

 

 

                        விநாயகசக்கரம்

 

பாரப்பா கணபதியின் திறத்தைக் கேளு

        பாங்கான முக்கோண மிட்டுக் கொண்டு

நேரப்பா அதனடுவே ஓங்காரம் போட்டு

        நினைவாக அதனடுவே யேகம் போட்டு

காரப்பா சதாசிவத்தைக் கருத்திலூணிக்

        கருணையுள்ள கணபதியே நமாவென்றேதான்

கூரப்பா குருபதத்தில் நின்று கொண்டு

        கூர்மையுடன் செய்திடவே வருவார்பாரே     -38

 

பாரான கணபதிதான் பிரகாசித்தால்

        பாங்காக அவர்பதத்தைப் பணிந்து போற்றி

நேராக நின்றநிலை தனைக் கண்டு

         நினைவுடனே கேட்டதெல்லா மீவார் பாரு

கூறானகுண்டலிதான்பிரகாசித்தால்

        குணமான அஷ்டசித்துங் கைக்குள்ளாகும்

வீறான புத்திகளுஞ் செம்மையாகும்

        வேண்டுவதுக் கிவர்திறந்தான் வேணும்பாரே- 39

 

 

                            மானதபூசை

 

பாரப்பா மானதமாம் பூசை கேளு

       பருவமுடன் கால்முகங்கள் சுத்தி பண்ணி

சேரப்பா வீபூதியைத்தான் உத்தளமாய்ப் பூசி

       சித்த மனதொன்றாக அறிவிற் பூண்டு

நேரப்பா  நின்றநிலை தவிரா மற்றான்

       ரேசகமாய்ப் பூரணத்தை நினைவா யோட்டிக்

காரப்பா கும்பகத்தில் நின்றாயானால்

       கருணையுள்ள சிவபூசை கோடியாமே   - - 40

 

கோடியென்றா லெத்தனையோ கோடி காணுங்

       கூர்மையுள்ள மானதமாம் பூசை நேர்மை

பேடிகளாய்த் திரிந்ததினால் வருவதேது

        பெண்மயக்கங் கொண்டதினாற் காண்பதேது

நாடினதாய் நன்றாக நாடவேணு

         நாட்டிலுள்ள தபோதனரை வணங்கவேணும்

வாடிமனந் திரிந்தாலென்றுங் காணாய்

        வஞ்சகருடன் சொல்லாதே மவுனம் பாரே - - 41

 

 

மவுனமென்ற பொருளதிலே மனத்தை யூணு

      மனதாக பூரணத்தை வணங்கி நில்லு

கெவுனமுடன் பூரணத்தில் நின்றாயானால்

      கேளடா அஷ்டசித்ததுங் கைக்குள்ளாகும்

பவுனமென்ற குண்டலியின் நன்மையாலே

        பாரபாத்தின் கிருபையினாற் பரிவாய்க்காணும்

அவமான புத்திதனை நினைந்தாயானால்

        அடிமுடியும் அம்பரத்தை அகன்றுபோமே. - - 42


                                                                                                   இரவிமண்டலம்

 

அகலாத சூரியன்தன் மண்டலத்தைக் கேளு

      அகாரமுடன் உகாரத்தை யணைத்துக் கொண்டு

பகலான வுதயமதில் மகாரந் தன்னைப்

       பருவமுடன் கும்பகத்தைப் பணிந்தேயனால்

ஜெகமுழுது மாடிவருஞ் சூரியன்தானப்பா

       சிவசிவா பிரகாசங்கோடி ரவிக் கொப்பாகும்

இகலான மனதுகந்தால் சித்தியாகும்

       இருள்கண்டு வெளியாகு மனத்தைப் பாரே   - - 43

 

 

 

மனதாகச் சந்திரன்தான் சூரியனிற் சென்று

         வாறதுவும் போறதுவுமப்போ காணும்

இனமான சந்திரன்தான் சூரியனே யாகும்

        இன்பமுள்ள சூரியனே சந்திரனா யிருக்கும்

கனமாக நிலைத்ததுதான் சூரியனே யப்பா

      கண்டதொரு சந்திரனே யெங்கே யென்றால்   

  தனதாகச் சத்தியிடமிருந் தாரையா

      தானவனாய் நின்றதுதான் ரவியு மாச்சே  - - 44


            பஞ்சபூசாதி வகையுரைத்தல்

 

ஆச்சப்பா பிருதிவிதா னப்பைக் கொள்ளு

      மப்பதுதான் மீறியல்லோ நெருப்பைக் கொள்ளும்

பேச்சப்பா நெருப்பதுதான் வாய்வு கொள்ளும்

      பேரான வாயுதானெங்கே யென்றால்

போச்சப்பா ஆகாசந்தன்னில் நின்று

      புகழான விந்துவென வளர்ந்துதையா

நீச்சப்பா விந்துவது நாதமாச்சு

     நிலைத்துதடா நாதமென்ற பொருள்தான் பாச்சே -45

 

 

பாங்கா நாதமதில் விந்து சேர்ந்து

      பரப் பிரமரூபமென பாரின் மீதே

நீங்காத மாய்கையோடு வளந்து தப்பா

     நிலைத்ததொரு பகுத்தறிவி னினைவினாலே

தீங்கானமாய் கையெல்லா மறுத்து தள்ளி

     தெசதீட்சை யேறுதற்குக் குருவைத் தேடி

ஓங்கார கம்பமதில் மனதை வைத்து

        ஒருமித்தேன் குருபதத்திலொரு மித்தேனே  - - 46

 

முப்பூ விபரம் 

 

ஒருமித்த முப்பூவின் விபரங் கேளு

     வுண்மையுடன் பூமியுட நாதம் வாங்கித்

தருமித்த சிறுநீறும் பாண்டத்திட்டு

      தயவான வுவர்ப்பூவை யதிலே போட்டு

கருவுற்ற பாண்டமதைப் பதனமாகக்

        கருவாக ஞாயிறு முன் வைத்திடப்பா

மருவுற்ற வுவர்பூவைக் கரைத்து நீயும்

       வாரடா மறுபாண்டந் தன்னிற்றானே  -  47

 

 

தானேதான் பத்துமுறை யிந்த வீதஞ்

        சமர்த்தாக முடிந்தவுடன் சொல்லக் கேளு

வீணேதான் திரியாதே யிந்த வுப்பில்

        விபரமுட னிடைக்கிடைதான் வீரம்பூரம்

தேனேதான் முப்பூவு மொன்றாய்க் கூட்டி

         செம்மையுடன் அறுநீரால் கல்வத்தாட்டி

கோனருளா லுருட்டியதை வட்டி பண்ணி

       கொடுமையுள்ள ரவிமுகத்தில் வைத்திடாயே – 48

 

வைத்திடுவாய் ரவிமுகத்தில் நீறு மட்டு

          மைந்தனே பத்தெருவில் புடத்தைப் போடு

மெய்த்திட்ட சுன்னமாமென்ன சொல்வேன்

         மெய்யான சுண்ணமதைப் பதனம் பண்ணிக்

கைத்திட்டமாகவே சவுக்காரத்தைக்

         கருவாக எடுத்துவந்து கலசத்திட்டு

மைத்திட்டமான சிறுநீரை விட்டு

         மைந்தன ரவிமுகத்தில் வைத்துப் போற்றே  - 49

 

 போற்றியே ரவிமுகத்தில் வைத்த பின்பு

         பூரணத்தை யுடன் சேர்த்துப் பூரம் போட்டு

கூட்டியே கரைத்து நல்ல அடுப்பி லேற்றிக்

         குமுறவே வைத்தெரிப்பாய் வற்று மட்டுஞ்

சாத்திகமாய்த் திரியாம லெடுத்துப் பாரு

        தன்மையுள்ள சவுக்காரஞ் சுன்னமாகும்

நாற்றிசையு மெய்க்கு மிந்த சவுக்காரத்தை

         நன்மையுடன் பதனமாய் வைத்திடாயே  -   - 50

 

வைத்தபின்பு சிறுநீரைப் பாண்டத்திட்டு

        மைந்தனே ரவிபீசங் கூடச் சேர்த்து

நைத்தபின்பு அடுப்பேற்றித் தீயை மூட்டி

        நன்மையுடன் நீர்வற்றி உப்பாய் நிற்குங்

கைத்ததொரு நீருப்பைப் பதனம் பண்ணு

        கசடருட னீகருவைக் கருத வேண்டாம்

புத்தியுடன் பெரியோரைத் தொண்டு பண்ணி

         பூரணத்தைப் பற்றி மனதளவில் நில்லே - - 51

 

நில்லப்பா சுழிமுனையில் வங்கென் றோதி

        நிலையான மூலமதில் சிங்கென் றோது

செல்லப்பா கண்டமதில் அங்கென்றே தான்

       திரமான ஈராறு மடங்கும் வீட்டில்

அல்லப்பா சொல்லுகிறே னீராறுந்தா

        னமர்ந்திருக்குங் குருபதத்தி லருளைப் போற்றி

வில்லப்பா நாணேற்றிச் சாந்தொடுத்தாப் போல்

       விசையான சுழிமுனையில் மேவிப்பாரே.   -  - 52

 

பாரப்பா ரவிமதி சுடர் மூன்றுப்பில்

       பண்பாக வகைக்கொரு பலத்தை வாங்கி

சேரப்பா கலவத்திட்டு மைந்தா  சீக்கிரமாய்

       மூன்று மொன்றாய்ப் பொடித்துக் கொண்டு

வாரப்பா செயநீரை விட்டு மைந்தா

      வார்த்த நீர் வற்றுமட்டுங் கல்வத்தாட்டு

காரப்பா ஈராறு சாம மட்டுங்

      கனலெலும்ப நன்றாக ஆட்டித் தீரே   - - 53

 

 

ஆட்டியதோர் முப்புவை வட்டுப் பண்ணி

        ஆதித்தன் முன்பாகவுலரப் போட்டு

வாட்டுறவு இல்லாம லெடுக்க வேண்டாம்

        வரிசையுள்ள வட்டதுவுங் கண்ணிலிட்டாக்கால்

(கணீலிட்டால் ? 65ம் பாடல் பார்க்க)

தாட்டிகமாய் வட்டதுவைப் பதனம் பண்ண

        சமரசமாய்க் காற்றிலா விடத்தில் தானு

மூட்டடா நூறெருவில் புடந்தான் போட்டு

      முக்யமுள வுப்பதுவுஞ் சுன்னமாச்சே   -  - 54

 

 

பூநீற்றுக்கட்டு

 

ஆச்சப்பா யின்னமொரு விபரங் கேளு

        அருளான பூநீறு அன்பாய் வாங்கி

பேச்சப்பா வொன்றுமில்லை சுத்தசலந் தன்னில்

        பேணியே கரைத்திறுத்து ரவிமுகத்தில் வைத்து

காச்சப்பா இப்படியே பத்துமுறை மட்டுங்

        கருவான பூநீறு கட்டிப் போகும்

போச்சப்பா வூறலது போச்சுபோச்சு

        புதுமையுள்ள பூநீரைப் பதனம் பண்ணே -  - 55

  

பதமான காரமுடன் சாரம் ரெண்டும்

      பக்குவமா யொன்றாக்கி ரவியிற் போட்டு

சதமாகக் காய்ந்தப் பின்பு சாரஞ்சேரு

     சாதகமாய் ரவிமுகத்தில் பின்னும் வைத்து

நிதமாக யிப்படியே பத்துமுறை யப்பா

      நிச்சயமாய் செய்துவிடு நினைவாய்த் தானும்

விதமாகக் கட்டியது வுப்பாய்ப் போகும்

      விருது பெற்ற வுப்பதுதான் சொல்லக் கேளே  - - 56

 

கேளப்பா கட்டியதோர் பூநீறொன்று

        கிருபையுள்ள களிச்சுன்ன மிடையே சேர்த்து

கேளப்பா வீரமொடு பூரங் கூட்டி

        கொடியாகக் கலவத்திலிட்டுக் கொண்டு

நீளப்பா செயநீரால் விட்டு ஆட்டி

        நிச்சயமாய் ஈராறு சாம மாட்டு

தேளப்பா கொட்டியது போல வேசஞ்

      சிவசிவா என்னசொல்லுவேன் வட்டு பண்ணே - - 57

 

பண்ணப்பா வட்டதுவு நன்றாய்ப் பண்ணி

     பரிதி முகமுன்பாகப் பதிய வைத்து

நண்ணப்பா சூரியனைப் பணிந்து போற்றி

     நன்றாகக் காய்ந்த பின்பு வோட்டில் வைத்து

மண்ணப்பா மேலோடு பொதிய மூடி

       மக்களே மண்சீலை யேழுஞ் செய்து

 உண்ணப்பா பத்தெருவில் புடத்தைப் போடு

       ஓகோகோ கடுங்காரஞ் சுன்னமாச்சே   - - 58

 

சவுக்காரக்கட்டு

 

ஆச்சப்பா இன்னமொரு விபரங் கேளு

            அருளான சவுக்காரக் கட்டி வாங்கி

மூச்சப்பா ஓடாமல் கலசத்திட்டு

            முக்கியமுள்ள காரமுடன் சாரஞ் சேர்த்து

காச்சப்பா அடுப்பேற்றி நன்றாக் காய்ச்சு

            கருணையுள்ள சவுக்காரத்தெண்ணை போகும்

பேச்சப்பா ஒன்றுமில்லை சவுக்காரந்தான்

            பிலமாகக் கட்டியது செத்துப்போச்சே   59

 

கர்ப்பூரக் கட்டு

 

போச்சப்பா கற்பூரக்கட்டி வாங்கி

            புதுமையுள்ள செயநீரில் தோய்த்துத் தோய்த்து

காச்சப்பா ரவிமுகத்தில் நன்றாய்க் காய்ச்சு

            கருவாக இப்படியே பத்துமுறைக் காச்சு

மூச்சப்பா வொடுங்கியது ஒடுங்கிப் போகும்

            முக்கியமுள்ள விளக்கொளியில் பிடித்தே யானால்

ஆச்சப்பா தீபமது அதிலொட்டடாது

            அன்பாகக் கட்டியது முழுக்கட்டாமே.         60

 

 துரிசிக் கட்டு

 

கட்டான துரிசியொரு கட்டி வாங்கிக்

      கருவான பாரையுப்பை யதின் மேல் பூசி

மட்டான செயநீரால் தோய்த்துத் தோய்த்து

      மைந்தனே அக்கினியில் வாட்டு வாட்டு

இட்டமுட னிப்படியே பத்துமுறை வாட்டு

        இறுகிய துரிசதுவும் வெளுத்துக் கட்டும்

சட்டமுனித் துருசைப் பதனம்பண்ணு

       சண்டாளர்க் கிந்தமுறை சாற்ற வேண்டாம்  - 61

 

முக்கட்டுச் சுண்ணம்

 

சாற்றக்கேள் சவுக்காரங் கற்பூரந்தான்

       தயவான துரிசதுவு மூன்றுங் கேளு

பார்த்தல்லோ மூன்றுமோ ரிடையாய்ச் சேர்த்துப்

       பக்குவமாய் கல்வத்திலிட்டு மைந்தா

வார்த்தரைக்க அறுவகையுந் தன்னாலாட்டு

      மைந்தனே முப்பத்திரண்டு சாமம்

சாற்றாலே தானரைத்து வட்டு பண்ணி

       தளரவே ரவிமுகத்திலுலர்த்திடாயே    - - 62

 

உலர்ந்த பில்லை ஓட்டில் வைத்து ஓடு மூடி

       உத்தமனே மண்சீலை யேழுஞ் செய்து

அலர்ந்ததொரு எருவடுக்கி புடத்தைப் போடு

        அப்பனே ஒருமித்து சுன்னமாகும்

வளர்ந்ததொரு தீயாறு எடுத்துப் பாரு

        வடுகனுக்கும் கணபதிக்கும் பூசை பண்ணி

 மலர்ந்த பூச்சுண்ணமப்பா கொடியவேக

       மாசற்ற சுன்னமதைப் பதனம் பண்ணே  - - 63

 

 

முப்பூச் சுன்னம்

 

பண்ணப்பா வெடியுப்பு சீனக்காரம்

        பாங்கான கல்லுப்பு மூன்று மொன்றாம்

கண்ணப்பா கலவத்திட்டுக் கொண்டு

       கருவான வெடியுப்பு நீராலாட்டி

தண்ணப்பா ஈராறு சாமமாட்டு

        சமர்த்தாகக் கனலெழும்ப நன்றாயாட்டி

விண்ணப்பா ரவிதனிலே காய வைக்க

        விதமாக வுருட்டியதை வட்டு பண்ணே   - - 64

 

பண்ணியதோர் வட்டதனை யோட்டில் வைத்துப்

         பக்குவமாய்க் காயவைப்பாய் பருதி தன்னில்

புண்ணியனே வட்டதுவுங் கணீலிட்டாக்கால்

        புதுமையுடன் ஓட்டில் வைத்து சீலை செய்து

நண்ணவே அஞ்சு பத்து எருவிற்றானும்

       நாட்டியே புடம்போட வெளுத்து நீறும்

தண்மையுள்ள சுன்னமதாய் நீறிப் போகுந்

       தயவான சுன்னமதைப் பதனம் பண்ணே    - 65

 

கருவங்கச் சுன்னம் 

 

பதமான இன்னமொரு சுன்னப்போக்கு

      பக்குவமாய்ச் சொல்லுகிறேன் புலத்தியா கேள்

இதமான கருவங்கம் ரசம் சேர்த்து

       இன்பமுள்ள விந்துவுட நாதங் கூட்டி

சதமான வீரமுடன் பூரஞ் சேர்த்து

      சாதகமாய்க் கலவத்திலிட்டுக் கொண்டு

விதமாக அறுவகை நீர் தன்னாலாட்டு

         விசையுடனே ஈராறு சாமமாட்டே   - - 66

 

ஆட்டியதோர் வட்டதனை வட்டு பண்ணி

       அப்பனே ரவிமுகத்தில் நன்றாய் வைத்து

நாட்டியே காய்ந்ததொரு வட்டுதானும்

        நன்மையுடன் காய்ந்து கணீலிட்டால் மைந்தா

தாட்டிகமா யோட்டில் வைத்து சீலை செய்து

        தன்மையுட னூறெருவில் புடத்தைப் போடு

பாட்டதிகஞ் சொல்லவில்லை அப்பாகேளு

       பண்பாக நீறியது சுன்னமாச்சே    -  67

 

 

கர்பூரச் சுன்னம்

 ஆச்சப்பா இன்னமொரு விபரங் கேளு

        அன்பான கற்பூரக்கட்டி வாங்கி

பாச்சப்பா ரவிமதியுங் கூடச்சேர்த்து

        பரிசுடைய வீரமுடன் பூரங் கூட்டி

காச்சப்பா கலவத்திலிட்டுக் கொண்டு

        கனலெழும்ப  ஈராறு சாமமாட்டி

மாச்சலது செய்யாமல் வட்டு பண்ணி

        மைந்தனே ரவி முகத்திலுலர்த்திடாயே - - 68

 

உலர்ந்த பில்லைதனை யெடுத்து ஓட்டில் வைத்து

      உத்தமனே மேலோடு பதிய மூடி

தளர்ந்ததுவும் போகாமல் மண்ணுஞ் செய்து

     தரணிதனில் ஒரு முழத்தில் குழிதான் வெட்டி

உயர்ந்ததொரு எருவடுக்கி புடத்தைப் போடு

      உத்தமனே புடமாறி எடுத்துப் பாரு

மலர்ந்ததொரு பூப்போலே சுன்னமாகு

      மாசற்ற சுன்னமதை வைத்துப் போற்றே  - - 69

 

 

கெந்தகச் சுன்னம்

 போற்றவே யின்னமொரு புதுமை கேளு

       பொல்லாத கெந்தகந்தான் பலமும் வாங்கி

காட்டியதோர் விந்துவுடனாதங் கூட்டி

      கருவான வீரமுடன்பூரஞ் சேர்த்து

வாட்டமில்லாக் கலவத்திலிட்டு மைந்தா

       வகையாக அறுவகைநீர் தன்னாலாட்டி

தாட்டிகமாய் வழித்து வைத்து பில்லை தட்டி

        தன்மையுடன் ரவி முகத்திலுலர்த்திடாயே - - 70

 

உலர்ந்த பதமென்ன வென்றால் கணீலிட்டாக்கால்

       உத்தமனே ஓட்டில் வைத்துச்சீலை செய்து

அலர்ந்த மலர்க் குருபதத்தைத் தொண்டு பண்ணி

       அளவுடனே புடம்போடச் சுன்னமாகும்

மலர்ந்த சுன்னந்தனை யெடுத்துப் பதனம் பண்ணி

      வாசமுள்ள சுன்னமடா மைந்தா கேளு

சலந்து மிகவாடாதே பதனம் பண்ணு

      சதாநித்தஞ் சதாசிவத்தைப் பணிந்து போற்றே -71

 

 

போற்றுவது யாரையென்றால் பூரணத்தை மைந்தா

      புதுமையுள்ள பூரணமே தெய்வந் தெய்வம்

நாட்டுவது சுழிமுனையில் காசியைத்தா

     னன்மையுடன் பூரகமே செய்ய வேணும்

தேட்டமுடன் சுழிமுனையில் சேர்ந்தால் மைந்தா

         சிவசிவா சிவயோகி சீவன் முத்தன்

தாட்டி காயடி மூலமூலாதாரந்

         தன்மையுடன் சார்ந்தவனே தவசியாமே  - - 72

 

பூமிநாதம்

 

ஆமப்பா யின்னமொரு விபரங் கேளு

       அன்பான பூமியுட நாதம் வாங்கி

நாமப்பா சொல்லுகிறோம் விந்து நீரால்

       நன்றாக கரைத் திறுத்து ரவியில் போடு

காமப்பா நன்றாக காய்ந்துதானால்

      கருவாகப் பத்துமுறை யிப்படியே காச்சு

வாமப்பால் தன்னாலே கட்டிப் போகும்

      மகத்தான பூவப்பா சிவமதாச்சே           73

 

 

செயநீர்

 

ஆச்சப்பா சத்தி யென்ற பூரணந்தான்

         அருளான பீங்கானில் வாங்கி மைந்தா

பாச்சப்பா சிவந்தனிலே எட்டிலொன்று

      பக்குவமா யீந்தவுடன் பருவம் பாரு

பேச்சப்பா வொன்று மிலை சிவமாய்ப் போகும்

        பெலமான செயநீரால் வீரம் பூரம்

தேச்சப்பா செயநீரில் பொடியைத் தூவி

        சிவசிவா ரவி முகத்தில் வைத்திடாயே - -74

 

வைத்ததொரு செயநீரில் கா ரமேறி

       மகத்தான கொடிதாக நீறதாகும்

கைத்ததொரு செயநீரைப் பதனம் பண்ணி

        கருவான காசி என்ற குப்பி தன்னில்

புத்தியுடன் குருபதத்தைப் பூசை பண்ணிப்

           (    புதுமையுள்ள வடுகனுக்கு வடமாலை சாத்தி

பக்தியுடன் பூசை பண்ணி)    செயநீர் தன்னில் 

        பக்குவமாய் செய் தொழிலைப் பகரக்கேளே - - 75

 (1887ம்வருட பதிப்பில் இல்லாத வரிகள் .)

 

கேளப்பா இச்சலத்தில் துரிசு லிங்கம்

     கெவுரி சிலை தார வெள்ளை பூரம் வீரம்

நாளப்பாது வைத்து ரவிமுகத்தில் மைந்தா

    நாளாறு தினத்தி லதுக் கட்டிப் போகும்

மாளப்பா இச்சலத்திலெச் சரக்கு மாளு

       மைந்தனே இந்நீரி லின்னங் கேளு

கோளப்பா ஒன்றுமில்லை செயநீர் தன்னை

         குணமாகப் பீங்கானில் வார்த்துக் கொள்ளே – 76

 

கொள்ளப்பா நாகமொடு வங்க மீயங்

        குருவான ரசமுடனே காந்தந் துத்த

மெள்ளப்பா ஓட்டில் வைத்து சுருக்கு தாக்க

         வேகமதுதா னடங்கிக் கட்டிப் போகும்

வில்லப்பா தனக்கு நாணேற்றினாப் போல்

         வெகுவேதை சணவேதை விகிதமாகும்

அல்லப்பா சொல்லுகிறேன் மனதடங்கி நில்லு

        அன்பாகக் குருபதத்தி லருள்தா னோக்கே  - - 77

 

 

நோக்குவது பூரணத்தால் நோக்க வேண்டும்

        நுண்மையுடன் மனதடங்கி நிலைக்க வேணும்

வாக்கு மனதொன்றாகி நிற்க வேணும்

       வஞ்சமன கசடகற்றி மனது பூண்டு

ஆக்கைநிலை தனையறிந்து குருவைக் காரு

         ஆனந்த மதியமுத மன்பாய்க் கொள்ளு

நாக்கு நுனி பதிவுமிக நன்றாய்ப் பாரு

         நாதாந்தப் பேரொளியைக் காரு காரே  - - 78

 

யோகமுறைகூறுதல்

 காமப்பா மயேந்திரமாங் கிரியிற் சென்று

     கருணையுள்ள பூரணத்தில் கருத்தை வைத்து

பாரப்பா சக்கரத்தில் நின்று கொண்டு

       பாலகனே நந்தி கண்டால் வாதங்காணும்

வீரப்பா சொல்லுகிற வார்த்தையினா லென்ன

        விருதாவில் சுடுகாட்டுப் பிணமாய்ப் போவார்

சேரப்பா மூலத்தை ஒளி காண மட்டுஞ் சேர்த்துநீ

       சுழிமுனையில் சிறக்க நில்லே   - -  79

 

நின்றதினால்மனதொடுக்குங்காற்றாடாது

      நோறிந்துகுருபதத்தைக்குருவாய்க்காரு

பண்டுவினைதானகலும்பயமேயில்லைப்

      பார்க்கையிலேஆதாரந்தோணுஞ்தோணுஞ்

சென்றுநீயவ்விடத்தில்சென்றுகொண்டு

       சிவசிவாசித்திஎல்லாந்திரமாயாடு

நன்றானமனதைவிட்டுக்காத்தாயானால்

     நலமில்லாச்சுழுத்தியுள்ளேயழுத்துந்தானே  -  80

 

தானென்றவாசியினால்குருவைக்காரு

         தன்மைவிட்டுஇருந்ததினாலொன்றுமில்லை

ஊனானஊனறிந்துவுண்ணவேணும்

         உண்மையுள்ளசத்திசிவங்காணவேணும்

தேனானஅமுதமதுகொள்ளவேணுந்

       தௌpந்தங்கேயோகமுடனிருக்கவேணும்

கோனானகுருஞானந்தௌpந்துமைந்தா

        கூர்மையுடன்சுழிமுனையைக்கூர்ந்துபாரே – 81

 

பாரானமண்ணாசைதள்ளினாலும்

      பண்பான தீனியு னாசை யாலும்

போரன பெண்ணாசை தள்ளினாலும்

      பிலத்ததொரு திரோதையின் கூற்றினாலும்

கூறான மண்ணாசைக் கொடுமையாலும்

       கூற்றான காமத்தின் கொடுமையாலுந்

தேறாமலிந் தாசை கொண்ட பேர்கள்

         சிவசிவா சீவகளைத் திறங் காணாரே  - - 82

 

 

சீவகளைதனை யறிந்தால் பாடிவிக்குஞ்

       சிவசிவா வரிசையுட னுண்ணப் பண்ணுஞ்

சீவகளை தானறிந்து எட்டு நாலுஞ்

        சிவசிவா புறப்பட்டு நாலும் பாழாய்

சீவகளை மதிபோலே சீரணித்து

       செகத்திலே மாணிடர்கள் மாண்டாரையா

சீவகளையானதுவே மூல மூலஞ்

        செம்மையுள்ள கதிரான வன்னிதானே  – 83

 

தானென்ன பரத்தினுட அடிதானென் பார்

        தன்மையுடன் அகார முதல் சோடசமாய் நிற்கும்

வானென்ற கண்டகத்திற் காணு

       மகத்தான வாயுவுக்கு வுகந்த வீடு

வூனென்ற பஞ்சகர்த்தாக்க ளிருக்கும் வீடு

       வுற்பனமாஞ் சத்தி சிவ மொடுங்கும் வீடு

தேனென்ற மதியமுதஞ் சொலிக்கும் வீடு

         சிவசிவா சீவகளை யிருந்த வீடே  - - 84


 

கொள்ளும்பொருள் 

 வீடறிந்து மந்திரத்தை நிறுத்த வேணும்

      வீட்டிலுள்ள பேர்களையும் விரும்ப வேணும்

நாடறிந்த நல்ல பதங்காண வேணுங்

       நன்மையுள்ள சத்தி சிவ பூசை வேணும்

கூடிருந்து குருபதங் காண வேணுங்

      குருடரைப் போலிருந்தாக்கால் குணமோ மைந்தா

தேடறிந்தால் சற்குருவைத் தேட வேணுஞ்

        செகசாலமாய் கையெல்லாந் தள்ளு தள்ளே -85


 

தள்ளும்பொருள்

 தள்ளுவது ஆரையென்றால் குணமில்லாரை

     சற்குருவை யறியாத சமயத்தோரை

கள்ளு அபின் சாரரயங் கொண்ட பேரைக்

      கஞ்சாவு மீனிறைச்சி கலந்த பேரை

உள்ளுணர்ந்து பாராத உலுத்த மாண்பர்

      உத்தமரைத் துஷணித்த வுருட்டு மாண்பர்

நல்லுணர்வு இல்லாத அசடர் மெத்த

      நாட்டிலே யவர்களை நீயறிந்து தள்ளே  - - 86

 

 

ஆகாசஜெயநீருப்பு 

 அறிந்து கொண்டு இந்தால ரவியைக் கட்டு

     அந்தாவி பூரணத்தி லணுவாய்ப் போகு

முறிந்தாவி பூரணத்தில் பட்ட போதே

     முக்கியமுள்ள லமாகி ஜெயநீராகி

செறிந்ததொரு செயநீரைப் பீங்கான் தன்னில்

        சீராக விட்டு ரவிமுகத்தில் வைத்தால்

பொறித்தவொரு பொறிபோலே யுப்பாய் நிற்கும்

புதுமையுள்ள வுப்பதனைப் பதனம் பண்ணே - - 87

 

பதமான வுப்பெடுத்துக் கொண்டால் மைந்தா

       பக்குவமா யறுசுவையுங் கழன்று போகும்

சதமான பூரணத்தைப் பார்த்தால் பாரு

       தருவான கற்பகம் போல் கற்பமாகும்

அதமான வியாதியெல்லா மதமாய்ப் போகும்

       ஆனந்த மயமான அரூபமாகும்

மதியான மாய்கையெல்லா மற்றுப் போகு

        மந்திர பஞ்சாட்சரத்தை மருவிப் பாரே  - 88

 

 

பஞ்சாட்சாமகிமை

 

மருவி நின்ற னங்களுக்கு மஞ்சுபூதம்

       வாகான தேவதைக்கு மஞ்சு பூதம்

தருவான யோனியெல்லா மஞ்சு பூதம்

      தாக்கான அண்டமெல்லா மஞ்சு பூதம்

குருவான சதாசிவத்துக் கைந்து பூதங்

       கூறான அஞ்செழுத்தா லெல்லா மாச்சு

துருவமுடன் வேடமிட்டு நீறு சாற்றி

        துன்பவினை தீரரமல்துடி கொண்டாரே  - 89

 

முப்புவின்பெயர்

 துடிகொண்ட முப்பூவின் விபரங் கேளு

      சோதியுப்பு ஆதிதனைச் சொல்லக் கேளு

முடிகொண்ட வழலை யென்றுங் கல்லுப்பென்று

         முனையான சுழினை யென்றும் வண்ணானென்றும்

படியான படிகியென்றுங் குடுகுடானைப்

       பங்கயத்தின் பூவென்றும் பாருப்பென்றும்

வடிவான ஆகாசப் புரவியென்று

        மகத்தான மவுனமென்றும் வயங்கும் பாரே  - - 90

 

போர்கொண்ட வடிவான விந்து வென்றும்

      பிலத்த நீருப்பென்னும் வாரிதி தானென்றும்

கார்கொண்ட மேகமென்றுங் கங்கை யென்றுங்

       கருவான வூசி நீருப்ப தென்றும்

சீர்கொண்ட வெண்சாரை சார மென்றுஞ்

        சியமென்றுங் கருவேம்பின் சார மென்று

மூர்கொண்ட சயிலமென்றுஞ் செவநீனாரன்று

       முத்தமனே திராவகத்தி லுண்மைதான  - -  91

 

உண்மையுள்ள அடியென்றுஞ் சத்தி யென்று

        முவாரன வுவனாரன்றுஞ் சருக தென்றுந்

தன்மையுள்ள பூமியுடநாத மென்றுஞ்

       சங்கையுள்ள பிருதிவியின் காரமென்றும்

புன்மையுள்ள பூரமென்றும் புழுகதென்றும்

       பொல்லாத விஷமியென்றும் போதமென்றும்

பண்புள்ள சில்லென்றுங் களியுப்பெ ன்றும்

        பாங்கான பூரணத்தினுப்பின் பேரே   - - - 92

 

 

முப்பூ மகிமை

 உப்பான முப்பூவின் விபரஞ் சொன்னேன்

       உகமையில்லா முப்பூபு மூன்று மூப்பூ

அப்பாகேள் முப்பூவும் பிர்மா விஷ்ணு

        அரகார ருத்திரனுமாகி நின்றார்

தப்பாத முப்பூவை யாவர் காண்பார்

      தன்மையுள்ள பொரியோர்க ளறிவார் பாரு

முப்பான முப்பூவு மாதியிலே குருவாய்

       முடிந்திருக்கு தென்றறியார் மூடர்தானே - - 93

 

தானென்ற மூடர்கள்தானுப் பெடுக்க வென்று

       தயவான முப்பூவைப் பேதனமே செய்வார்

ஊனென்ற முப்பூவையறியார் மூடர்

       ஊசிநீர் தனில் கரைத்து ரவியில் வைப்பார்

தேனென்ற பூரணந்தான் மயங்கிப் போகுஞ்

       சிவசிவா காரமெல்லாஞ் செத்தே போகு

மானென்ற பூப் பார்த்தால் மயங்கிப் போவான்

         மனமடங்கும் பூவையார் முடிப்பார் சொல்லே – 94

 

சொல்லான முப்பூவை யுலகத்தோர்கள்

       தொழுதுமே யதின் விபரந் துலங்க மாட்டார்

அல்லலதைச்செய்து வைத்து அலைந்து போவார்

        அமுதமென்ற பக்குவத்தை யார்தான் காண்பார்

கல்லல் செயும் பாவிகள்தான் வெவ்வே றுப்பு

      கலந்தெடுக்க வேணுமென்று கழுதை மாண்பர்

குல்லல் செய்து குழம்பி மிகச்செத்தே போனார்

       குலமான வுப்புனுட செயல் காணாரே  -     - 95 

 

செய லறியாப் பாவிகளைச் சேர்க்க வேண்டாஞ்

      செய்வினைகள் தீராத கழுதை மாண்பர்

மயலாசை தனைப் பீடித்து வாத மார்க்க

       மகத்தான பூரணத்தை யல்லல் செய்வான்

தயவான கல்லுப்பை நொருக்கிக் கொண்டு

      தானரைத்துப் புடம் போட்டுத் தயங்கிப் போவான்

துயவான கயவர்கடா மெத்தவுண்டு

        தோல்லுலகி லிந்நூலைத் துலங்கிடாதே   - - - 96

 

நூற்பெருமை 

 இந்நநூல் தானாயிரத்து இருநூறுக்குள்

     ஏக நிற மயமான கருவைச் சொன்னேன்

தன்மை யுடனிந்நூலைப் பதனம் பண்ணு

       சாயுச்சிய பதவியடா இந்த நூல்தான்

உண்மையுட னூலெடுத்து ஒடுக்கந் தன்னில்

       உண்மையுடன் மவுனந்தா னுகந்து பாரு

நன்மையுடன் மனதுகந்து பார்த்தாயானால் 

       நல்ல பதமுண்டாகும் நாடிப் பாரே   -  -   97

 

நாட்டமில்லா மூடருடன் சொல்ல வேண்டாம்

        நல்ல குணமில்லாரை நாட வேண்டாங்

கூட்டமிட்டுக் கல்லலிடுங் குறும்பர் மெத்தக்

        கூத்தாடிச் சிலம்பது போல் குறும்பு செய்வார்

வாட்டமில்லாக் கருணபெறுந் தேவி வாலை

       மகத்தான பூரணத்தின் மகிமை தன்னை

தேட்டமில் வம்பரிடஞ் சேர வேண்டாஞ்

      பூரணத்தின் செயல் காணாதே    -  -  -  98

 

காணாத பூரணத்தின் கருவினாலே

         கருணையுள்ள கயிலாச மேரு தன்னை

கோணாதே நின்றநிலை குறிததுக் கொண்டு

        குணமாக ரேசக பூரகமும் பண்ணி

வானான கும்பகத்தில் மனது பூண்டால்

         மகத்தான சிவயோக மாகுமாகுந்

தேனான மதியமுதஞ் செயல் தன்னாலே

          சிவசிவா சிவயோகத் திறந்தான் பாரே  - - 99

 

பஞ்சபூதமெழுகு

 பாறான பிருதியு மப்புங் கூட்டி

        பங்கயத்தின் மேலேறிப் பதிவுமாகி

தேறாகத் தேய்வுடனே வாய்வு ரெண்டுஞ்

       சேர்ந்தாக் காலைந்துருவு மொன்றாய்ப் போச்சு

கூறாத ஐந்துருவு மொன்றாய் நின்றால்

        குருவான போதமடா ஆர்தான் காண்பார்

மாறாத மனமுடைய சித்தர்க் கெல்லாம்

        வகையான ஐந்துருவும் வணங்கும் பாரே  - - 100

 

 

அகத்தியர் - அமுதக் கலைஞானம் 1200 /  பாடல்கள் 101 -  200



                            



 

 

 

No comments:

Post a Comment

நண்பர்களே தகவல்களைத் தொடர்ந்து பெற follow பண்ணுங்க, உங்கள் கருத்துகளைகளை பதிவிடுங்க.பார்வையிட்டதுக்கு நன்றி